Por Thozhil: நடிகனாகவில்லை என்றால்... சரத்குமார் சொன்ன சுவாரஸ்யத் தகவல்!
பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சரத்குமார் தனது நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவத்தில் தான் குற்றவாளியைக் கண்டுபிடித்த சுவாரஸ்யமானக் கதையைப் பகிர்ந்துள்ளார்.
E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோ அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'போர் தொழில்'. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காவல்துறையில் எதிரும், புதிருமாக இருக்கும் அசோக் செல்வன், சரத்குமார் இருவரும் எப்படி ஒரு மர்ம கொலைக்கான முடிச்சுகளை அவிழ்க்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும்.
போர் தொழில் படம் வரும் ஜூன் மாதம் 9ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவானது அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.
அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பல்வேறு சுவாரஸ்யமானத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார் சரத்குமார்.
ஒரு சிறப்பு குற்றப்பிரிவு விசாரணை அதிகாரியாக நடித்த அனுபவம் எப்படியானதாக இருந்தது என்கிற கேள்விக்கு பதில் அளித்த சரத்குமார் “நான் ஏற்கனவே காவல் அதிகாரியாக நிறையத் திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அதே நேரத்தில் நான் நடிகனாக ஆவதற்கு முன்பே எனக்கு இந்த மாதிரியான விசாரணைகளில் முன் அனுபவம் இருக்கிறது. எப்படி என்று நீங்கள் என்னை கேட்கலாம். என் நண்பர் ஒருவரை நன்றாக கோட் சூட் அணிந்த இருவர் ஏமாற்றி பல லட்சங்களை அவரிடம் பெற்று ஓடிவிட்டான். நானும் எனது நண்பரும் அவனைப் பிடிப்பதற்காக நீண்ட நாள் காவல் நிலையத்திற்கும் வீட்டிற்குமான அலைந்திருக்கிறோம். சில நாட்கள் கழித்து அவனைப் பிடிப்பதற்காக நாங்கள் ஒரு யுக்தியை கையாண்டோம். அவனுக்கு தெரிந்தவர்களின் வீட்டிற்குச் சென்று அவனை எப்படி பிடிக்கலாம் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தோம். என் முகம் அதிகம் பரிச்சயமில்லாததால் நான் அந்த திருடனின் சொந்தகாரர்களின் வீட்டிற்கு ஏதாவது ஒரு பொய் சொல்லிக்கொண்டு அவர்களின் வீட்டிற்குள் நுழைவேன். பின் ஒரு நாள் அந்த திருடனை பிடிக்க சென்னையில் வளசரவாக்கத்தில் ஒரு இடத்திற்கு செல்லலாம் என நான் காவலரிடம் கூறினேன். ஆனால் அவன் அங்கு வருவதற்கு வாய்ப்பே இல்லையென அந்த காவலர் கூறினார். ஆனால் என்னுடைய உள்ளுணர்வு அவன் அங்கு வருவான் என்று சொல்லியதால் என் வற்புறுத்தலின் பேரில் நாங்கள் அங்கு சென்றோம். இரவு வெகு நேரம் நாங்கள் அங்கு காத்திருந்தோம். யாரும் வராததால் காவலர் கிளம்பலாம் எனச் சொன்னார். இன்னும் சிறிது நேரம் காத்திருக்கலாம் என்று நான் அவரிடம் சொன்னேன். அதிகாலை சுமார் 2:30 மணியளவில் ஒரு டாக்ஸி அங்கு வந்தது. அந்தத் திருடனைப் பிடித்து அவனிடம் இருந்து எங்கள் பணத்தை நாங்கள் மீட்டோம். நான் ஒரு நடிகன் ஆகாமல் இருந்திருந்திருந்தால் நிச்சயம் ஒரு காவல் அதிகாரியாக ஆகியிருப்பேன். என் அப்பாவும் நான் ஒரு காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்றே விரும்பினார்” எனத் தெரிவித்தார்.