Sarathkumar Health: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதியா? - சரத்குமார் விளக்கம்!
உடல்நலக்குறைவு காரணமாக சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அவர்கள் தரப்பில் இருந்து இது குறித்த விளக்கமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். அடிப்படையில் பாடிபில்டரான இவர் ‘கண் சிமிட்டும் நேரம்’ படம் மூலம் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய்காந்த் நடித்த புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடித்தார். இந்தப்படம் அவருக்கு பெரிய பிரேக்காக அமைய. தொடர்ந்து ‘புது பாடகன்’ ‘வேலை கிடைச்சாச்சு’ ‘எங்கிட்ட மோதாதே’ உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.
தொடர்ந்து பாலைவன பறவைகள் படத்தில் கதாநாயகனாக நடித்த சரத்குமார் தொடர்ந்து ‘ சேரன் பாண்டியன்’ ‘சூரியன்’ ‘ சூரிய வம்சம்’ ‘நாட்டாமை’ ‘நட்புக்காக’ என பல கிளாசிக் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தார். கதாநாயகனாக பல படங்களில் நடித்த சரத்குமார் வயது முதுமை காரணமாக பின்னாளில் துணைக்கதாபாத்திரங்களில் நடித்தார். இதற்கிடையே நடிகர் சங்கத்தலைவராகவும் பதவி வகித்த அவர் அதில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார்.
தற்போது விஜய் நடிப்பில் பொங்களுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவருக்கு இன்று உடல்நலக்குறைவு ( டயரியா சம்பந்தமான பிரச்சினை) ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சரத்குமார் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், “ ‛சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார். பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்து கொண்டு இருக்கிறார். யாரும் எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.