HBD Santhanam | `லொள்ளு சபா’ முதல் `சபாபதி’ வரை.. `காமெடி கிங்’ சந்தானம் பிறந்த நாள் ஸ்பெஷல்!
தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியில் இருந்து தனது கலைப் பயணத்தைத் தொடங்கி, இன்று ஹீரோவாக காமெடி மன்னனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் நடிகர் சந்தானம். அவருக்கு இன்று பிறந்த நாள்.
தமிழ் சினிமாவைப் பொருத்த வரையில், காமெடி என்பது கதைக்களத்திற்கு வெளியே, தனியொரு ட்ராக்காக இருந்து செயல்படும் ஒரு கலை வடிவமாக இருந்து வந்தது. நாகேஷ், என்.எஸ்.கே, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் எனக் காமெடி நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்படும் காமெடி ட்ராக்களில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி, தங்களை உச்சபட்ச காமெடி நட்சத்திரங்களாக நிலைநிறுத்திக் கொண்டவர்கள். இந்தப் பட்டியலில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தனக்கென்று ஒரு இடத்தை வேறு பாணியின் மூலமாக பிடித்திருப்பவர் நடிகர் சந்தானம். தனக்கென்று தனியாக காமெடி ட்ராக் எதுவுமின்றி, முன்னணி நடிகர்களுடன் கதையின் போக்குடன் இணைந்து காமெடியில் கலக்கும் பாணி நடிகர் சந்தானத்திற்குச் சொந்தமானது.
விஜய் தொலைக்காட்சியின் `லொள்ளு சபா’ மூலமாக மக்கள் முன் அறிமுகமானார் நடிகர் சந்தானம். டைமிங் காமெடி, உடனுக்குடன் கூறப்படும் கவுண்டர்கள் ஆகியவை நடிகர் சந்தானத்தின் ட்ரேட்மார்க் முத்திரை. 2004ஆம் ஆண்டு, நடிகர் சிம்புவின் மூலமாக `மன்மதன்’ படத்தில் நடித்து, திரையுலகிற்குள் நுழைந்தார் சந்தானம். அதன்பிறகு தொடர்ந்து அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவை. இயக்குநர் எம்.ராஜேஷுடன் இணைந்து சந்தானம் நடித்த `சிவா மனசுல சக்தி’, `பாஸ் என்கிற பாஸ்கரன்’, `ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். ஹீரோவின் நண்பனாக மூன்று படங்களிலும் நடித்த சந்தானம், தொடர்ச்சியாக ஹீரோவாகவே உருவெடுக்க இந்தத் திரைப்படங்களின் வெற்றி மிக முக்கிய காரணம்.
காமெடியனாக இருந்தாலும் சரி, ஹீரோவாக இருந்தாலும் சரி, நொடிக்கு நொடி கவுண்டர் வசனம் பேசுவதும், எதிரில் இருப்பவரைக் கலாய்த்தே காலி செய்வதும் சந்தானத்தின் ஸ்டைல். `ஃபோனுக்கு எனக்கும் ராசியே இல்ல’ என நண்பனின் கோபத்திற்கு ஃபோனை உடைந்து நிற்கும் போதும், `விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி’ என நண்பனின் சபதத்தைத் தன் சபதமாக எடுத்து நிறைவேற்றுவது, `பார்த்தா!’ என்று கொடுத்த குரலுக்குக் கண் முன் நிற்பது என ஹீரோவின் நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக மாறின சந்தானம் நடித்த கதாபாத்திரங்கள். தொடர்ச்சியாக, யார் ஹீரோவாக இருந்தாலும் அவருடன் சந்தானம் இருந்தால் மினிமம் கேரண்டி நிச்சயம் எனத் தமிழ் சினிமாவின் போக்கு மாறியதும், சந்தானமும் ட்ராக்கை மாற்றினார்.
`அறை எண் 305ல் கடவுள்’, `கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ஆகிய படங்களில் முன்னணி வேடத்தில் நடித்திருந்தாலும், சந்தானம் தனியாக ஹீரோவாக அறிமுகமான திரைப்படம், `வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’. தெலுங்கு திரைப்படமான `மரியாதை ராமன்னா’வின் ரீமேக்கான இந்தப் படத்தில் தன் உடல்மொழி, ஸ்டைல் எனப் பலவற்றையும் மாற்றி, கதாநாயகனாகவே அறிமுகமானார் நடிகர் சந்தானம். தொடர்ந்து, `இனிமே இப்படித்தான்’, `தில்லுக்கு துட்டு’, `சர்வர் சுந்தரம்’, `தில்லுக்கு துட்டு 2’, `ஏ1’, `டகால்டி’, `பாரிஸ் ஜெயராஜ்’, `டிக்கிலோனா’, `சபாபதி’ ஆகிய திரைப்படங்களிலும் நடிகர் சந்தானத்தின் ஹீரோ வேடம் மக்களால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியில் இருந்து தனது கலைப் பயணத்தைத் தொடங்கி, இன்று ஹீரோவாக காமெடி மன்னனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் நடிகர் சந்தானம். அவருக்கு இன்று பிறந்த நாள்.
ஹேப்பி பர்த்டே சாண்டா!