Actor Ranjith: “சுயசாதியை விமர்சித்த பாலச்சந்தர், இன்றைய இயக்குநர்களுக்கு தைரியமில்லை” - நடிகர் ரஞ்சித் கருத்து
Actor Ranjith: “அன்றைய காலக்கட்டத்து படைப்புகளில் இருந்த எழுத்து சுதந்திரம் இன்று இல்லை” - நடிகர் ரஞ்சித்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகரான ரஞ்சித் (Ranjith) தற்போது இயக்கி நடித்துள்ள ‘கவுண்டம்பாளையம்’ திரைப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுவரையில் மக்களை மிகவும் அன்பாக அணுகும் ஒரு எளிமையானவராக இருந்த நடிகர் ரஞ்சித், சமீப காலமாகவே மிகவும் பரபரப்பான ஒரு நபராகப் பேசப்படுகிறார். இந்நிலையில் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
அவர் பேசுகையில் சபையில் அல்லது மேடையில் பேசும்போது இனிக்க இனிக்க பேசும் பலர் நேரடியாக பேசும் போது பல விமர்சனங்களை சொல்வதுண்டு. 'மறுமலர்ச்சி' மாதிரியான திரைப்படங்களில் நடிக்கும்போது எனக்கு யோசிக்கவே முடியாத அளவுக்கு மிகப்பெரிய மைலேஜ் கிடைத்தது. அதே போல 'பாரதி கண்ணம்மா' படத்தில் நான் போராட்டக்காரனாக நடித்த கதாபாத்திரத்தை மிகவும் விருப்பட்டு தான் நடித்தேன். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. காதலர்கள் சாகலாம், ஆனால் காதல் என்றுமே சாகாது என்பது தான் அந்தப் படத்தின் மையக்கருவாக இருந்தது. அது போன்ற படங்கள் வந்த காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் சிக்கல், இது போன்ற பிரச்சினைகள் எல்லாம் வந்ததே கிடையாது. படைப்பாளிகளுக்கு அன்று சுதந்திரம் இருந்தது.
இயக்குநர் பாலச்சந்தருக்கு அன்று இருந்த திராணியும் தைரியமும் இன்று எந்த ஒரு இயக்குநருக்கும் கிடையாது. இதை நான் சவாலாகவே சொல்வேன். அவர் தைரியத்தோடு தனது சுய சாதியையே விமர்சித்து படம் எடுத்துள்ளார். சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல் தனக்கு கருத்து சுதந்திரத்தை வைத்து ஒரு படைப்பை உருவாக்குவது என்பது மிகப்பெரிய விஷயம். பாரதிராஜாவின் முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது போல பல படங்களை துணிச்சலுடன் எடுத்துள்ளார். அன்றைய காலத்தில் அந்தப் படங்களை படைப்புகளாக பார்த்தோம், அதனால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வரவில்லை.
அன்றைய படங்களில் எந்த ஒரு சாதியைப்பற்றிய திணிப்பும் புலப்படவில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு படத்திலும் சாதி வலுக்கட்டயமாக திணிக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. பாலச்சந்தர், பாரதிராஜாவின் படங்கள் இன்று வெளியாகி இருந்தாலும் இது போன்ற பிரச்சினைகளில் சிக்கி இருக்கும். அரசியல் எப்போது மேலோங்கி நிற்கிறதோ அப்போது கலை அரசியலின் கையில் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. “அவரை வைத்து படம் பண்ணபோறீங்களா வேண்டாம் பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுங்க” என சொல்லும் அளவுக்கு தான் இன்றைய சினிமா இருக்கு. தனிப்பட்ட முறையில் இது பற்றி நான் சொல்லவில்லை. நான் கடந்து வந்த பாதை அப்படி இருந்தது. சினிமாவில் நிறைய இடங்களில் இது தான் கையாளப்படுகிறது.
இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் பெரும்பாலானோர் தூங்குவதில்லை. ஆனால் இன்று அவரையே விமர்சனம் செய்கிறார்கள். இன்று எந்த கன்டென்ட் போட்டாலும் அது பற்றி நெகட்டிவ் விமர்சனம் செய்ய பத்து பேர் இருக்கிறார்கள். உலகம் இப்போது அப்படி மாறிவிட்டது. மனதில் வன்மங்கள் அதிகரித்துவிட்டது. அன்று வந்த படைப்புகள் இன்று வந்து இருந்தால் பெரிய பிரச்சினை புரட்சிகள் ஏற்பட்டு இருக்கும். இது என்னுடைய கருத்து” எனப் பேசியுள்ளார்.