”எம்.ஜிஆருக்கு மீன்கறி..500 ரூபாய் பணம் கொடுத்த சிவாஜி” - ரங்கம்மா பாட்டி நினைவலைகள்
எம்.ஜி.ஆருக்கு பின்னாடி காட்சில ஆடினேன். பார்த்துட்டு நீ மெட்ராஸ் வந்துருன்னு சொன்னாரு. அப்படி வந்ததுதான் என்னுடைய சினிமா பயணம்.
எம்.ஜி.ஆர். தொடங்கி விஷால் தனுஷ் வரை பல்வேறு தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த ரங்கம்மா பாட்டி வயோதிகம் காரணமாக இன்று காலமானார்.சென்னையில் ஒரு மாத காலம் சிகிச்சையில் இருந்த அவர், சொந்த ஊரான தெலுங்குபாளையத்துக்கு திரும்பினார். நாற்பது வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்தாலும் பெரிதாக ஏதும் சம்பாதிக்காத அவர், வீடு ஏதுமின்றி வாடகைக்கு கூரை வீட்டை ஒன்றை எடுத்து தங்கி இருந்தார். அவரை அவரது சகோதரிகள் மற்றும் அவரது மகன் கவனித்து வந்தனர்.தயாரிப்பாளர் சின்னப்பா தேவரால் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தற்போது உள்ள அஜித், விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின் வரை பல நடிகர்களுடன் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோருடன் தான் நடித்த அனுபவத்தை அண்மையில் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார் அவர்.
”விவசாயி படத்துல கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளினு ஒரு பாட்டு அதுல எம்.ஜி.ஆருக்கு பின்னாடி காட்சில ஆடினேன். பார்த்துட்டு நீ மெட்ராஸ் வந்துருன்னு சொன்னாரு. அப்படி வந்ததுதான் என்னுடைய சினிமா பயணம். மெட்ராஸ் வந்து நிறைய படங்கள்ல நடிச்சேன். எம்.ஜி.ஆர் வீடுதான் எனக்கு என் பிள்ளைங்க எல்லோருக்கும் அடைக்கலம். அவர் வீட்டுக்குப் போய் மீன் சமைச்சுக் கொடுப்பேன். எங்கே சாப்பிட்டாலும் அவருக்கு நாற்காலியில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். மற்றொரு பக்கம் ஐயா சிவாஜி கணேசன், ரொம்ப எளிமையானவர். எங்கே போனாலும் தரையில் பாய் போட்டுதான் உட்காருவாரு. நாற்காலியில் உட்காரவே மாட்டார். அவரு யாருக்கும் பணமே தரமாட்டாருன்னு எல்லாரும் சொல்லுவாங்க. ஆனா அப்போவே அவரு என் பிள்ளைய வாங்கி மடில கொஞ்ச நேரம் வைச்சிருந்துட்டு எனக்கும் என் கூட வந்த நடிகருக்கும் 500 ரூபாய் கொடுத்தாரு. உத்தமராஜா படம் சூட்டிங்குக்குனு நினைக்கறேன். இதை பிரபுவுக்கு சொன்னதும் ஆச்சரியப்பட்டுப் போனார்” என்றார்.
இப்படிப் பல்வேறு நடிகர்களுடன் நடித்து வந்த ரங்கம்மாள் பாட்டியின் தற்போதைய வறுமை நிலை ஊடகங்கள் மூலமாக தெரியவந்தது. வறுமையில் வாடி வந்த நிலையில் சினிமாத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் நடிகர் சங்கத்தினர் உதவ வேண்டும் என ரங்கம்மாள் பாட்டி வலியுறுத்தி இருந்தார். அப்போது ”சினிமா துறையில் என்னுடன் நடிக்காத நடிகர்களே இல்லை. போதுமான அளவு சினிமா துறையில் பெயர் எடுத்துள்ளேன். கடைசி காலத்தை இங்கேயே கழித்துவிட உள்ளேன். தங்குவதற்கு ஒரு வீடு, சாப்பிடுவதற்கு உணவும் கிடைத்தால் போதும். அதற்கு யாராவது ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.