Game Changer : கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வருகிறதா ராம் சரணின் கேம் சேஞ்சர்? தில் ராஜூ தந்த அப்டேட்!
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படம் கிறிஸ்துமசுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ராம்சரண். மெகாஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிரஞ்சீவியின் மகனான இவர் மாவீரா படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். ஆர்.ஆர்.ஆர். படம் இவரது புகழை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது.
ராம்சரணின் கேம் சேஞ்சர்:
இவர் தற்போது பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர் ராம்சரணுடன் இணையும் முதல் படம் என்பதாலும், நேரடியாக இயக்கும் முதல் தெலுங்கு படம் என்பதாலும் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிறகு ராம்சரண் நடிக்கும் படம் என்பதால் அவரது ரசிகர்கள் இந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்துள்ளனர். இந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தில் ராஜூவிடம் ரசிகர்கள் கேம் சேஞ்சர் என்று கேட்டனர். அதற்கு அவர் கேம் சேஞ்சரா? கிறிஸ்துமசுக்கு பாக்கலாம்? என்று கூறினார்.
கிறிஸ்துமஸ் வெளியீடா?
அவரது பதிலைக் கேட்ட ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதனால், கேம் சேஞ்சர் படம் கிறஸ்துமசுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தின் வெளியீடு தற்போது முடிந்துள்ள நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் மீது ஷங்கர் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில், சமுத்திரகனி மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ராம் சரண் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்துள்ளார். ஊழலுக்கு எதிராக போராடும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ராம்சரண் நடித்துள்ள ராம்சரண் நேர்மையாக தேர்தலை நடத்துவதே படம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூவின் ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. நேரடியாக தெலுங்கில் உருவாகும் இந்த படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்தியா படமாகவும் வெளியாகிறது.
ஷங்கர் எதிர்பார்ப்பு:
கேம் சேஞ்சர் படத்தின் கதையை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுதியுள்ளார். ஷங்கர், பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளனர். வசனங்களை சாய் மாதவ் புர்ரா எழுதியுள்ளார். இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வெற்றியை தராத காரணத்தால், இந்த படத்தின் வெற்றியையே ஷங்கர் பெரிதும் நம்பியுள்ளார்.