Ramarajan: ஆளே மாறிப்போன கனகா.. பேசச் சென்ற ராமராஜனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கனகாவுக்கு அம்மா தேவிகா என்றால் உயிர். அப்பா விட்டு விட்டு போய் விட்டார். அம்மா இறந்த பிறகு மனதளவில் வெகு அளவில் பாதிக்கப்பட்டார்.
ஆள் அடையாளமே மாறிப்போன கனகாவை கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக நடிகர் ராமராஜன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் ராமராஜன் ”சாமானியன்” என்ற படத்தில் நடித்துள்ளார். எட்செட்ரா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ராகேஷ் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் மே 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ராமராஜன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ராமராஜனிடம் நடிகை கனகா பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, “மருதாணி படத்துக்காக நான் தேவிகாவிடம் சென்று கனகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க கேட்டேன். முதலில் ரெடியாக இருந்தவர்கள் அதன்பிறகு முடியாது என சொல்லிவிட்டார்கள். கனகாவின் முழு பெயர் கனக மகாலட்சுமி. அதன்பிறகு கங்கை அமரன் கரகாட்டக்காரன் படத்துக்கு பார்த்து விட்டு ஓகே சொன்னார். நான் தான் இவ்வளவு பெரிய பெயர் வேண்டாம். கனகா என வைக்கலாம் என கங்கை அமரனிடம் சொன்னேன். கனகாவுக்கு அம்மா தேவிகா என்றால் உயிர். அப்பா விட்டு விட்டு போய் விட்டார். அம்மா இறந்த பிறகு மனதளவில் வெகு அளவில் பாதிக்கப்பட்டார். தனக்கு யாரும் இல்லை என்ற நிலையில் படங்களில் நடித்து வந்தார்.
ஒருநாள் டப்பிங் யூனியன் தேர்தலுக்கு போய்விட்டு வரும்போது என்னை ஒருவர் கூப்பிட்டு கனகா மேடம் அழைக்கிறார் என சொன்னார். கனகாவிடம் சென்று கனகா எங்கே என கேட்க, நான் தான் அது என அவர் சொன்னார். என்னம்மா நீ வெயிட் எல்லாம் போட்டு வெள்ளக்கார பெண் மாதிரி இருக்கிறாய் என சொன்னேன். அதன்பிறகு பார்க்கவே இல்லை” என ராமராஜன் தெரிவித்தார்.
ராமராஜன் கதை
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மக்கள் நாயகனாக கொண்டாடப்பட்டவர் ராமராஜன். 1977 ஆம் ஆண்டு சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கிய அவர், 1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு படம் மூலம் ஹீரோவானார். கிட்டதட்ட 10க்கும் மேற்பட்ட படங்களையும் ராமராஜன் இயக்கியுள்ளார். அவர் நேர்காணலில் சொன்ன மருதாணி படமும் ராமராஜன் இயக்கியது தான். அந்த படத்தில் ஷோபனா ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.