(Source: ECI/ABP News/ABP Majha)
Vairamuthu On Rajinikanth : கள்ளிக்காட்டு இதிகாசம்.. உடல்வாகு..பேயத் தேவராக ரஜினிகாந்த்.. வைரமுத்து தெரிவித்த விருப்பம்..
கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பேயத் தேவராக ரஜினிகாந்த் நடித்தால் அவர் எதிர்பார்க்கும் ஊதியம் கிடைக்காது, ஆனால் அவர் எதிர்பாராத விருதுகள் கிடைக்கும் என்று வைரமுத்து பேசி உள்ளார்.
கள்ளிக்காடு என்ற வறண்ட நிலத்தில் நடமாடும் மனிதர்களின் வாழ்க்கையை எந்த வித அலங்காரப் பூச்சும் இல்லாமல் அப்படியே நம் கண்முன் நிறுத்திய நாவல்தான் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம். பேயத்தேவர் என்ற கதாபாத்திரத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட ஒரு கிராமத்து கதைதான் அது. தமிழில் மிகவும் பிரபலமான நாவல் ஆகும்.
நாவலை சினிமாவாக்கும் பாணி
தற்போது தமிழ் சினிமாவில் கிளாசிக் நாவல்களை திரைப்படமாக்கும் பாணி அதிகரித்து வருகிறது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் எம்ஜிஆர் காலத்தில் இருந்து படமாக்கும் முயற்சியில் இருக்க ஒரு வழியாக மணிரத்னம் வாயிலாக அந்த நாவலை திரைப்படமாக பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்க உள்ளது.
வெற்றிமாறன்
இது போன்ற பிரம்மாண்ட பொருட்செலவு இல்லாமல் நாவல், சிறுகதைகளை படமாக்கும் முயற்சிகளை வெற்றிமாறன் செய்து வருகிறார். லாக்கப் நாவலை அடிப்படையாக கொண்டு விசாரணை என்றும், பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து அசுரனும் எடுத்திருந்தார். தற்போது வடிவாசல் நாவல், துணைவன் சிறுகதை என வரிசையாக அதையே வெற்றிகழ்மரமாக செய்து வருகிறார்.
இயக்குநர் மகேந்திரன்
ஆனால் இதற்கெல்லாம் முன்னோடி, இயக்குனர் மகேந்திரன். புதுமைப்பித்தனின் சிற்றன்னையை உதிரிப்பூக்கள் ஆக்கியது தொடங்கி மேலும் பல நாவல்களை, சிறுகதைகளை நேர்த்தியாக திரைப்படம் ஆக்கி இருக்கிறார். ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் ட்ரெண்டில் இருக்கும் இந்த பாணியில் தனது கதையையும் படமாக எடுக்கலாம் என்று வைரமுத்து பேசி உள்ளார்.
கள்ளிக்காட்டு இதிகாசம்
அவர் பேசுகையில், "கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக எடுப்பதற்கு என்னிடம் பல இயக்குனர்கள் கேட்டனர். தொலைக்காட்சி தொடராக எடுக்கலாமா என்று பாரதிராஜா என்னிடம் கேட்டார். ஆனால் எனக்கு தயக்கம் இருந்தது. நாவலை படமாக்கும்போது இரண்டு விதமான சிக்கல்கள் உள்ளன, ஒன்று நாவலை விட படம் இன்னும் சிறப்பாக அமைந்துவிடுவது, மற்றொன்று குறைவாக வந்துவிடுவது. உதாரணத்திற்கு கல்கியின் பார்த்திபன் கனவு நாவல் படமாக்கப்பட்டபோது படைப்பின் உயரம் சற்று குறைந்து போனது, ஆனால் லெஸ் மிசரபில்ஸ் என்ற விக்டர் ஹியூகோவின் கதை தமிழில் ஏழை படும் பாடு என்று வந்தபோது வெற்றிபெற்றது. தில்லானா மோகனாம்பாள் வெற்றி பெற்றது." என்று சுட்டிக்காட்டினார்.
பேயத் தேவராக ரஜினிகாந்த்
மேலும் பேசிய அவர், "இது போன்ற உயரத்தில் கள்ளிக்காட்டு இதிகாசமும் படைக்கப்பட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த உயரத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் எடுக்கப்பட வேண்டுமேயானால் அதில் பேயத்தேவராக ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். காரணம் அவருடைய தமிழ்நாட்டு நிறம், கருத்த, இளைத்த, உயர்ந்த தேகம் அப்படியே பேயத்தேவர் கதாபாத்திரத்திற்கு பொருந்தும். வயதும் எழுபதை நெருங்கும் வயது. ரஜினிகாந்த் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் நடித்தால் அவர் எதிர்பார்க்கும் ஊதியம் கிடைக்காது, ஆனால் அவர் எதிர்பாராத விருதுகள் கிடைக்கும்" என்றார்.
தற்போது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்