Rajini in NTR centenary: முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆர். நூற்றாண்டு விழா...! சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார்..!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![Rajini in NTR centenary: முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆர். நூற்றாண்டு விழா...! சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார்..! actor rajini will participate as chief guest in NTR centenary celebration Rajini in NTR centenary: முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆர். நூற்றாண்டு விழா...! சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/23/dbf6c27eae8d69debb2ac4d9beaca2571682234511145571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தெலுங்கு நடிகரும், என்.டி.ஆரின் மகனுமான பாலகிருஷ்ணா உறுதி செய்துள்ளார்.
பாலகிருஷ்ணா வீடியோ:
பாலகிருஷ்ணா வெளியிட்டுள்ள வீடியோவில், வரும் 28ம் தேதியன்று விஜயவாடாவில் மறைந்த என்.டி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருடன், தானும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன்” எனவும் பேசியுள்ளார்.
என்.டி.ஆர். திரைப்பயணம்:
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1923 ம் ஆண்டு மே 28 ம் தேதி பிறந்தவர் நந்தமூரி தாரக ராமாராவ். ஆரம்பக் காலங்களில் பல்வேறு நாடகங்களில் நடித்த இவர், 1949 ஆம் ஆண்டு வெளியான மனதேசம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்பு இதிகாச மற்றும் புராணக் கதைகளில் கிருஷ்ணர் மற்றும் ராமர் போன்ற கடவுள் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மிகவும் பிரபலமானார்.
சிவாஜி நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் கிருஷ்ணன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். ராஜூ பேடா மற்றும் லவகுசா போன்ற திரைப்படங்கள் இவரை புகழின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றன. தமிழ் சினிமாவிற்கு எப்படி எம்.ஜி.ஆர் இருந்தாரோ, அதேபோன்று தெலுங்கு சினிமா உலகின் முடிசூடா மன்னனாக விளங்கியவர் என்.டி.ஆரை தெலுங்கு சினிமா ரசிகர்கள் ஒரு நடிகராக இல்லாமல் கடவுளாகவே பார்த்தனர். 300-க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ள என்.டி.ஆர். மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் திகழ்ந்தார்.
அரசியலில் என்.டி.ஆர்.
1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் பார்ட்டி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த என்.டி.ஆர்., 1983 முதல் 1989 வரையிலும் பின்னர் 1994 முதல் 95 வரையிலும் ஒருங்கிணைந்தஆந்திர மாநில முதலமைச்சராக செயல்பட்டார். 1984 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு ஆதரவாக என்.டி.ஆர். பரப்புரை செய்தார். 1995 ம் ஆண்டு என்.டி.ஆரிடம் இருந்து சந்திரபாபு நாயுடு ஆட்சியை பறித்த நிலையில், 1996 ம் ஆண்டு ஜனவரி 18 ம் தேதி என்.டி.ஆர். மாரடைப்பால் மரணமடைந்தார்.
நூற்றாண்டு விழா கொண்டாட்டம்:
இதைத்தொடர்ந்து கடந்தாண்டு முதல் என்.டி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்தில் என்.டி.ஆர். நூற்றாண்டு விழா விருதுகளும் வழங்கி நடிகர், நடிகைகள் கவுரவிக்கப்பட்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.அதோடு, என்.டி.ஆரின் கலை மற்றும் அரசியலுக்கான பங்களிப்பை போற்றும் வகையில், அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடபடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)