Actor Rajesh: நான் ஜெயலலிதா மாதிரி.. சினிமாவுக்கு அன்ஃபிட்.. மரணத்திற்கு முன் நடிகர் ராஜேஷ் தந்த பேட்டி
நடிகர் ராஜேஷ் தனது மரணத்திற்கு முன்பு அளித்த பேட்டியில் தான் ஜெயலலிதா மாதிரி என்றும், அதேசமயம் சினிமாவிற்கு தான் ஏற்றவன் அல்ல என்றும் பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும், சிறந்த பேச்சாளருமான ராஜேஷ் இன்று காலமானார். கதாநாயகனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள ராஜேஷின் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவுக்கு அன்ஃபிட்:
அவர் மறைந்துள்ள நிலையில், அவர் கடைசியாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பயம் கண்டிப்பாக தேவை. பயந்துகிட்டே இருக்கக்கூடாது. அசட்டுத் தைரியம் வருகிற ஆபத்துக்கு அஸ்திவாரம். நான் ரியல் எஸ்டேட் பண்ணது காலத்தின் கட்டாயம். அதுக்கு மிக முக்கிய காரணம் ஜானகி ராமச்சந்திரன். எனக்கு எம்.ஜி.ஆரோட 4 வருஷ பழக்கம். ஜானகி அம்மாவோட 15 வருஷ பழக்கம்.
என்னுடைய பழக்கவழக்கமும், குணமும் கொஞ்சம் சினிமாவுக்கு அன்ஃபிட். ஜேபியார்தான் என்னை ரியல் எஸ்டேட் தொழிலில் இழுத்துவிட்டார். எனக்கு ரியல் எஸ்டேட் என்றால் என்னவென்றே தெரியாது. ரியல் எஸ்டேட் எனக்கு பிடிக்காத தொழில். பணம்தான் கடைசியில் உச்சம். யாருகிட்டயும் போயி வாய்ப்பு கொடுங்கனு கை ஏந்துவதோ, சுகம் இல்லைனு கை ஏந்துவதோ கிடையாது.
ஜெயலலிதா மாதிரி:
அடுத்தவனை எவன் ஒருவன் துதி பாடுகிறானோ அவன் தன்னம்பிக்கை இல்லாதவன்.. தன்னம்பிக்கை உள்ளவன் துதி பாட மாட்டான். நான் யாரையும் துதி பாடமாட்டேன். திறமை இருந்தால் சொல்லுவேன். ஜெயலலிதா அம்மா மாதிரி. ஓபன்னா சொல்லிடுவேன். புகழ்ந்து தள்ள மாட்டேன்.
ரியல் எஸ்டேட் பிசினஸை என் தம்பி மனைவி, என் மாமா பையன் எல்லாம் நடத்துனாங்க. அதுதான் என்னோட கடைசி காலத்துல வாழ்க்கையை உயர்த்துச்சு. அதுதான் ஆச்சரியம். சினிமாவுலயும் அப்படித்தான். ஏதாவது ஒரு தொழிலுக்கு வருவாங்க, வேற ஒரு தொழிலில் கோலோச்சுவாங்க. ரியல் எஸ்டேட் வைத்து பலரும் விமர்சனம் பண்ணாங்க. நான் இந்த வீட்டில் நான் இருப்பதற்கு காரணம் எம்.ஜி.ஆர்., அவரது மனைவி, ஜேப்பியார் ஆகியோர்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
அந்த 7 நாட்கள்:
முதன்முதலில் அவள் ஒரு தொடர் கதை என்ற படம் மூலமாக நடிகர் ராஜேஷ் நடிகராக அறிமுகமானார். அதன்பின்பு தொடர்ந்து கன்னிப்பருவத்திலே, தனி மரம், தை பொங்கல் என நடித்துக்கொண்டிருந்தார். அதன்பின்பு, பாக்யராஜ் நடிப்பில் வெளியான அந்த 7 நாட்கள் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருப்பார். அந்த படம் ராஜேஷிற்கு மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.
அதன்பின்பு தொடர்ந்து தமிழ் திரையுலகில் பரபரப்பான நடிகராகவே உலா வந்தார். சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, மோகன், கார்த்தி, அர்ஜுன், முரளி, விஜய், அஜித், சிம்பு என அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
தமிழில் கடைசியாக மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.





















