22 Years of Chocolate: இளைஞர்களின் கீதமான "மல மல மருதமலை” பாடல்.. 22 ஆண்டுகளை நிறைவு செய்த சாக்லேட்..
நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘சாக்லேட்’ திரைப்படம் இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘சாக்லேட்’ திரைப்படம் இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பிரசாந்த் உடன் இணைந்த முன்னாள் மிஸ் கோவா அழகி
2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். அவர் நடித்த படமெல்லாம் ஹிட் என்பதால் ரசிகர்கள் டாப் ஸ்டார் என அன்போடு பிரசாந்தை அழைத்து வந்தனர். இந்த நிலையில் தான் அவர் கமர்ஷியல் இயக்குநர் என பெயரெடுத்த ஏ.வெங்கடேஷ் உடன் “சாக்லேட்” படத்தில் இணைந்தார்.
இந்த படத்தில் ஹீரோயினாக ஜெயாரே, மும்தாஜ், லிவிங்ஸ்டன், சாரதா, சார்லி, தாமு என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இப்படத்துக்கு இயக்குநர் ஆர்.மாதேஷ் கதை, திரைக்கதை எழுதியிருந்தார்.
படத்தின் கதை
பிரசாந்த் ஜெயாராவே சந்திக்கும் முதல் பார்வையிலேயே அவரது பின்னணி தெரியாமல் காதலிக்க தொடங்குகிறார். பின்னர் தன் காதலை அவர் தெரிவிக்கிறார். ஜெயாரேவோ ஒரு வாரம் காதலித்து பார்க்கலாம், அதுவே வாழ்க்கை முழுமைக்கும் வழிவகுக்கும் என்ற நிபந்தனையோடு காதலை ஏற்கிறார்.அதேசமயம் ஜெயாரே பிரிந்து இருக்கும் உதவி கமிஷனர் லிவிங்ஸ்டன் மற்றும் சுஹாசினி தம்பதியரின் மகளாக உள்ளார்.
ஜெயாரே அவர்களின் மகள் என்று தெரியாமல் பெற்றோருடன் பிரசாந்த்துக்கு அறிமுகம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஜெயாரே பெற்றோர் யார் என்ற உண்மை பிரசாந்துக்கு தெரிய வரும். மேலும் லிவிங்ஸ்டனும் தனது மகளிடம் இந்த ஒரு வார காதல் நிபந்தனையுடன் கைவிடும்படியும், பிரசாந்த் நல்ல குணங்கள் பற்றியும் தெரிவித்து நம்பிக்கை ஏற்படுத்துகிறார், இந்த பக்கம் பிரசாந்த் சுஹாசினியிடம் ஜெயாரே தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைக்க போராடுகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதை
இளைஞர்களின் கீதமான ‘மல மல’ பாடல்
இப்படத்திற்கு தேவா இசையமைத்த நிலையில் கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதினார். இதில் கப்பலே கப்பலே, துரியோதனன் துரியோதனன், கொகரகிரி, என் நிழலாய் வந்தாய் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், ஒரு பாடல் மட்டும் இளைஞர்களின் கீதமாக மாறிப்போனது. அது அனுராதா ஸ்ரீராம் , ஏஆர் ரெய்ஹானா குரலில் உருவான "மலை மலை" பாடல். இந்த பாடலுக்கு நடிகை மும்தாஜ் அழகு சேர்த்திருப்பார்.
கூடுதல் தகவல்கள்
சாக்லேட் படம் இசை வெளியீட்டு விழா நடைபெறாமல், இதன் ஆடியோ கேசட்டுடன் சாக்லேட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் படம் ரிலீசான நாளில் ஏழைக் குழந்தைகளுக்கு நடிகர் பிரசாந்தின் எடையான எழுபத்தைந்து கிலோ சாக்லேட்டை வழங்கினார்.
முதலில் இந்த படத்தில் ஹீரோயின்களாக நடிக்க வைக்க ரீமா சென் மற்றும் ரிச்சா பல்லோட் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இருவரும் அதிகம் சம்பளம் கேட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து முன்னாள் மிஸ் கோவா போட்டியில் வெற்றி பெற்ற அவந்திகாவை ஜெயா ரே என்ற பெயரில் தமிழில் நடிகையாக அறிமுகம் செய்தார்கள்.
இந்த சாக்லேட் படம் அதே பெயரில் 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படத்தின் வெற்றியால் பிரசாந்த் மற்றும் ஏ. வெங்கடேஷ் மீண்டும் 2005 ஆம் ஆண்டு பெட்ரோல் என்ற படத்தில் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் பல பிரச்சினைகளால் அப்படம் கைவிடப்பட்டது.
மேலும் படிக்க: Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!