”அப்பா இனிமே என்கூட நடிக்காதேனு சொல்லிட்டாரு “ - நடிகர் பிரபு ரிவீல் செய்த சீக்ரெட்ஸ்!
”எங்களுக்கு சினிமா பற்றி தெரியக்கூடாதுனு அப்பா நினைச்சாங்க. நான் விளையாட்டுல நான் நல்ல ஆர்வமா இருந்தேன். ”
சினிமா பிரியர்கள் யாராக இருந்தாலும் சிவாஜியின் நடிப்பை கண்டு சிலிர்க்காமல் இருந்திருக்க முடியாது. அத்தனை நுணுக்கங்களுடன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதே போல ஒரு நடிகனால் தமிழ் பாடம் எடுக்க முடியும் என்பதை உணர்த்தியவரும் சிவாஜி கணேசன்தான். ஏற்ற, இறக்கம் , தெளிவு என தமிழின் அத்தனை அழகும் அவர் உச்சரிப்பில் வெளியாகும் . இந்த நிலையில் நடிகரும், சிவாஜியின் இளைய மகனுமான பிரபு தனது தனது குடும்பம் , தந்தை , நடிப்பு என அனைத்து குறித்தும் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
”என் அப்பா கூட பிறந்தவங்க 3 பேரு. நாங்க இப்போ இருக்க மாதிரிதான் அப்போதும் எல்லோரும் ஒரே வீட்டிலேயே வளர்ந்தோம். எனது பெரியப்பா, சித்தப்பா பசங்க எல்லோருமே ஒன்றாகத்தான் வளர்ந்தோம். வித்தியாசம் வந்துவிட கூடாது என அப்பா எல்லா குழந்தைகளையும் ஒரே மாதிரியாகத்தான் வளர்த்தார். எங்க பெரியப்பாவை எல்லோரும் பெரியப்பானு அழைப்போம். அப்பாவை எல்லோரும் அப்பானுதான் அழைப்போம் . சித்தப்பாவை அங்கிள்னு அழைப்போம். அவங்க பசங்க கூட அவரை அங்கிள்னுதான் சொல்லுவாங்க. அவர் லண்டன்ல படிச்சாரு. அவருதான் எங்களை வழிநடத்தினாரு. பெண் பிள்ளைகள் எல்லாம் இங்க இருந்து படிச்சாங்க. நாங்க எல்லோரும் பெங்களூரில் இருக்க கூடிய அத்தை வீட்டுல தங்கி படிச்சோம். எங்களுக்கு சினிமா பற்றி தெரியக்கூடாதுனு அப்பா நினைச்சாங்க. நான் விளையாட்டுல நல்ல ஆர்வமா இருந்தேன். கடைசியா சினிமாவுக்கு வந்துட்டேன். நான் நடிக்க வந்த பிறகுதான் என் அப்போவோட அருமையே எனக்கு தெரிய ஆரமித்தது. நான் நடிக்க வற்றதுக்கு முன்னால நிறைய ஆக்ஷன் படங்கள் பார்ப்பேன்.
View this post on Instagram
என் அப்பாக்கிட்ட கேட்டுருக்கேன். ஏன் அப்பா நீங்க சண்டையெல்லாம் போடமாட்டீங்களானு. நடிக்க வந்த பிறகுதான் அவர் பிறவி நடிகர்னு புரிஞ்சுக்கிட்டேன். அப்பா கூட நான் 19 படங்கள் பண்ணியிருக்கேன். சில படங்கள் மக்களுக்காக என்னை கட்டாயப்படுத்தி பண்ண வச்சாங்க. அவர் கூட நடிக்கும் பொழுது நிறைய கற்றுக்கொண்டேன். ஓர வஞ்சனயெல்லாம் பண்ண மாட்டாரு. எல்லோருக்கும் சொல்லிக்கொடுப்பது போலவே சொல்லிக்கொடுப்பாரு. நீயும் நடி , நானும் நடிக்கிறேனு போட்டி போட்டு நடிப்பாரு. நானெல்லாம் அந்த டைம்ல கான்வெண்ட் தமிழ், சொல்லவே வெட்கமா இருக்கு. அவர் என்னை தமிழை அழகா உச்சரிடானு பல முறை சொல்லியிருக்காரு. முதல்ல திட்டுவாரு அதுக்கு பிறகு யார்ரா இவனையெல்லாம் கூட்டிட்டு வந்தது சொல்லுவாரு. அப்பா கூட சங்கிலி படத்துல சண்டை போட வச்சுட்டாங்க. அப்பா என்னை உண்மையில வெளுத்துட்டாரு. 30 படங்களுக்கு பிறகு 10 மாதங்கள் பிரேக் எடுத்தேன். அதன் பிறகு அப்பாக்கூட நடிப்பதில்லைனு முடிவு பண்ணேன். எனக்கு என்னவோ அவர் நிழல்லயே இருக்க மாதிரி இருந்தது. அதன் பிறகு அப்பாவும் சொன்னாரு, நீ என்கூட நடிக்காதப்பா.. உன்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைக்குறாங்க. உன்னோட அடையாளம் தெரியாம போயிடும்னு சொன்னாரு. அதன் பிறகு செகெண்ட் ஹீரோவாக நடிக்க ஆரமிச்சேன். படிப்படியாக வாய்ப்புகள் வந்தது. என்னை வச்சு கிட்டத்தட்ட 16 படங்கள் வாசு சார் பண்ணாரு. சின்னத்தம்பி படத்தை பார்த்துவிட்டு, அப்பா எனக்கு ஒரு பீம் சிங் கிடைத்தது போல உனக்கு வாசுனு சொன்னாங்க. நானும் குஷ்புவும் தர்மத்தின் தலைவன் படத்துலதான் முதன் முதலா ஒன்னா நடித்தோம். சின்னத்தம்பி படத்துல குஷ்புவை நடிக்க வைக்க கஷ்டப்பட்டது தயாரிப்பாளரும் , வாசு சாரும்தான். குஷ்பு ரொம்ப பிஸியா நடிச்சுட்டு இருந்த டைம் அது. அவங்கள கஷ்டப்பட்டு அழைச்சுட்டு வந்தாங்க. அவங்களும் ரொம்ப அழகா நடிச்சிருந்தாங்க. என்கூட அதிக படங்கள் பண்ணது குஷ்புதான். அவங்க கூட அதிக ஹிட் கொடுத்தது நான் தான்“ என சினிமா வாழ்க்கை குறித்து பகிர்ந்து இருக்கிறார் பிரபு.