நடிகர் நிவின் பாலி மீது வழக்கு.. படத்தில் வாய்ப்பு தருவதாக பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார்
தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து பல நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருகின்றன.
மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்தில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அவர் மீது நேரியமங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஹேமா கமிட்டி அறிக்கை:
மலையாள திரையுலக ஆண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே உலுக்கி இருக்கின்றன. இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஹேமா அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து கேரள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன்லால் உட்பட அவரது தலைமையில் இருந்த 17 நபர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
View this post on Instagram
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் நடிகர் திலீப் குமாரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக இந்த இந்த குழு விசாரணை செய்தது.
விசாரணை அறிக்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு கேரள அரசிடம் சமர்பிக்கப்பட்ட பின்பும் இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. சமீபத்தில் WCC என்கிற பெண்கள் அமைப்பின் மூலம் இந்த அறிக்கையின் முடிவுகளை வெளியிட கேரள அரசுக்கு வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நடிகைகளின் பெயர்கள் நீங்க இந்த அறிக்கையின் சில பகுதிகள் வெளியிடப்பட்டன.
பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள்: இதனைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர்கள் சித்திக் , ஜேயசூர்யா , முகேஷ் , இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். குற்றம் சுமத்தப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளது கேரள காவல் துறை.
இந்த நிலையில், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நிவின் பாலி இது ஒரு பொய் குற்றச்சாட்டு எனவும், இந்த புகார் அளித்தவரை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று பதிவிட்டிருக்கிறார்