"சதுரங்க வேட்டை படத்தின் கதையை ஹெச்.வினோத் இப்படிதான் சொன்னாரு..” - அதிரடி காட்டிய நட்ராஜ்
திருடன் அப்படினு உங்களுக்கு ஒரு பெயர் வந்தால் accept பண்ணுவீங்களா என கேட்டார். படம்தானே சார் பண்ண போறேன் ..நிஜமா திருடவா சார் போறேன் என்றேன்.
நிர்மல் குமார் மற்றும் ஹச்.வினோத் கூட்டு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சதுரங்க வேட்டை. இந்த திரைப்படத்தில் நட்டி என அழைக்கப்படக்கூடிய நடிகர் நடராஜன் சுப்ரமணியன் நடித்திருந்தார். 2002 ஆம் ஆண்டு யூத் திரைப்படத்தில் அறிமுகமான நடராஜன் அதன் பிறகு பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் , வில்லன் , ஹீரோ என பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த நேர்காணலில் அவர் தனது சினிமா கெரியர் பற்றி விரிவாக பேசியுள்ளார்.
அதில் ”எனக்கு நடிக்க வந்தது பற்றி சிறிய குழப்பம் இருந்தது . சக்கர வியூகம் என்னும் திரைப்படத்தை நானே தயாரித்தேன். அந்த படத்தை மக்களுக்கு எப்படி கொண்டு போக வேண்டும் என தெரியவில்லை. ஆனால் படத்தை பார்த்தவர்களிடமிருந்து படத்திற்கான வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு கிடைத்த படங்களில் எல்லாம் நடித்தேன். அப்படி நடித்த படங்களுள் ஒன்றுதான் சதுரங்க வேட்டை. அந்த படத்தின் கதையை சொல்ல வினோத் வந்தாரு. வந்து சோர்வா உக்காந்தார். உடனே என்னிடம் இந்த கதையை சொல்லுறதுக்கு முன்னால உங்கக்கிட்ட சில கேள்விகளை கேட்டுக்கலாமா என்றார். சரி சார் என்றேன். நீங்க படத்துல அடி வாங்கனும் உங்களுக்கு பரவாயில்லையா என்றார். நான் நிஜமா அடிக்காத வரைக்கும் சந்தோஷம் சார் என்றேன். அதன் பிறகு நிறைய ஓடனும், நிறைய நெகட்டிவ் ஷேட்ல இருக்கும் பரவாயில்லையா என்றார். சரி என்றேன். பின்னர் திருடன் அப்படினு உங்களுக்கு ஒரு பெயர் வந்தால் accept பண்ணுவீங்களா என கேட்டார். படம்தானே சார் பண்ண போறேன்.. நிஜமா திருடவா சார் போறேன் என்றேன்.
உடனே வினோத் இப்போ கதை சொல்லுறேன் சார் என , மொத்த கதையையும் என்னிடம் சொன்னார். கதையை கேட்டதும் கைத்தட்டிவிட்டேன். எங்க வினோத் இருந்தீங்க இவ்வளவு நாள் என கேட்டதும், இங்கதான் சார் இருந்தேன்...என்றார் சலித்துக்கொண்டே... ஏன் வினோத் இப்படி சொல்லுறீங்க என கேட்டதும்.. இல்ல..நிறைய இடத்துக்கு போனேன் இந்த கதையை எடுத்துக்கிட்டு, எல்லாரும் திருப்பி அனுப்பிட்டாங்க.. நீங்களும் என்னை திருப்பி அனுப்பதான் கதை கேட்கிறீங்கன்னு நினைச்சுட்டே சார் என்றார். இல்லை வினோத் சத்தியமா நான் பண்ணுறேன் என்றேன். அதன் பிறகு படம் ஷூட்டிங் போக இரண்டு மாதம் ஆகும் என்றார். நான் முன்பை சென்றுவிட்டேன். அதன் பிறகு மனோபாலா சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. எங்கடா இருக்கே என்றார். சார் நான் மும்பையில இருக்கேன் என்றதும், வினோத் உன்னை வச்சுதான் படத்தை பண்ணனும்னு சொல்லுறான்.. சீக்கிரம் வா ! படத்தை ஆரமிக்கனும்னு சொன்னார் அவ்வளவுதான். அதன் பிறகு அலுவலகம் சென்றதும் மனோபாலா சாரை மீட் பண்ணினேன். இவனை கூப்பிட்டு போடா என்றார். அதன் பிறகுதான் ராமநாதபுரம் ஷூட்டிங் சென்றோம். படம் வெற்றியடையும்னு கதை கேட்கும்போது தெரியும். ஆனால் மிகப்பெரிய வெற்றியடைய வைத்தது லிங்குசாமி மற்றும் சுபாஷ். திருப்பதி பிரதர்ஸ் சார்புல அவங்க படத்தை நல்லா மக்கள்க்கிட்ட கொண்டு போனாங்க. அதோடு வினோத், மனோபாலா சார்னாலதான் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆச்சு“ என சதுரங்க வேட்டை திரைப்படம் உருவான விதம் குறித்து பகிர்ந்துள்ளார் நடிகர் நடராஜன் சுப்பிரமணியம்.