ரஜினி ஹீரோவான பிறகு எனக்கு ஹீரோ ஆகும் ஆசை இல்லை: நளினிகாந்த்
ரஜினிகாந்த் ஹீரோவான பின்னர் திரையில் தான் ஹீரோவாக நிலைக்க முடியும் என்ற ஆசை அற்றுபோய்விட்டதாகக் கூறுகிறார் நடிகர் நளினிகாந்த்.
ரஜினிகாந்த் ஹீரோவான பின்னர் திரையில் தான் ஹீரோவாக நிலைக்க முடியும் என்ற ஆசை அற்றுபோய்விட்டதாகக் கூறுகிறார் நடிகர் நளினிகாந்த்.
1980 ஆம் ஆண்டு காதல் காதல் காதல் திரைப்படத்தில் அறிமுகமான இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நளினிகாந்த் ஒரு காலத்தில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தார். இவரது தோற்றம் ரஜினிகாந்தை ஒத்திருக்கிறது. இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி, மங்கம்மா சபதம், ருத்ரா, புதுபட்டி பொன்னுதாயி, எங்க முதலாளி, ராஜா எங்க ராஜா, யாமிருக்க பயமே போன்றவை ஆகும்.
அண்மையில் இவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில், "நான் 1972ல் கல்லூரியில் படிக்கும்போதே ரொம்பவே ஸ்டைலாக இருப்பேன். அப்பவே என் ஹேர் ஸ்டைல் எல்லாம் அமிதாப் பச்சன் ஸ்டைலில் இருக்கும் என்று நண்பர்கள் சொல்வார்கள். நான் சினிமாவில் நடிக்க என் நண்பர்களும் ஊக்கப்படுத்தினார்கள். அப்போது நானும் சினிமா வாய்ப்புகள் தேடினேன். ரஜினிகாந்தும் என்ட்ரி ஆகிறார். எல்லோரும் நானும் ரஜினியும் ஒரே தோற்றத்தில் இருப்பதாகப் பேசுகிறார்கள். ரஜினிகாந்த் ஹீரோ ஆன பின்னர் எனக்கு நான் ஹீரோவாக சோபிக்கலாம் என்ற ஆசையே அற்றுப் போகிறது. பின்னர் நான் வில்லனாக நடிக்க முயற்சிக்கிறேன். அப்போதுதான் நிறம் மாறாத பூக்கள் பாரதிராஜா இயக்குகிறார். ஆனால் அந்தப் படத்திற்கு என்னை பலரும் பரிந்துரைத்தும் அவர் ஏற்கவில்லை. ஏனென்றால் ரஜினியுடன் அப்போது அவருக்கு ஏதோ பிணக்கு இருந்தது. இப்படியாக நான் ரஜினி போன்ற தோற்றத்தால் நிறைய வாய்ப்புகளை இழந்தேன். 1976ல் நான் விரக்தியில் வீட்டைவிட்டு மும்பை சென்று மெடிக்கல் ரெப் ஆனேன். பெங்களூரு, ஆந்திராவில் பணி புரிந்துவிட்டு சென்னை வந்தேன். சென்னையில் பெத்தராயுடு வீட்டில் தங்கியிருந்தேன். பின்னர் திருமணம் ஆனது. ஒரு நாள் தியேட்டர் போயிருந்தேன். அப்போது என்னை ஒரு இயக்குநர் பார்த்தார். அவர் என்னை நடிக்குமாறு அழைத்தார். ஸ்ரீதர் படத்தில் நடிக்கிறாயா என்று கேட்டார். முதலில் நான் ரொம்பவே தயங்கினேன். பின்னர் என் ஹிஸ்டரி எல்லாம் சொன்னேன். அப்புறம் அந்தப் படத்தில் நடித்தேன்.
இயக்குநர் தசரி நாராயண ராவ் தெலுங்கு திரைப்பத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். இதுதான் என் முதல் படம் ரங்கூன் ரவுடி 1979 இல் வெளியிடப்பட்டது. தெலுங்கில் நான் 35 படங்கள் நடித்துள்ளேன். பாக்யராஜ் படங்களில் எனக்கு சில குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் வழங்கப்பட்டன. சிவாஜியின் சத்யம் படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தேன். அது 100 நாட்கள் ஓடியது. என். டி. ராமராவ், நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி போன்ற தெலுங்கின் முன்னணி நடிகர்களின் படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்துள்ளேன். அப்படியே என் ஃபேட் வில்லன் தான் என்று டிசைட் பண்ணி நடித்தேன்.
நான் 1973லேயே பாம்பே டயிங் மாடலாக இருந்திருக்கிறேன். அதன்பின்னர் தான் சினிமா எல்லாம். என் நடிப்பைப் பார்த்து என்னை எம்ஜிஆர் சார் கூப்பிட்டு அனுப்பினார். ஆனால் ஏனோ நான் போகவில்லை. அதற்கான காரணம் எனக்கு இன்றும் தெரியவில்லை. ரஜினிகாந்தை அதன் பின்னர் சில நிகழ்ச்சிகளில் நேரில் சந்தித்திருக்கிறேன். பெரிதாக அவரிடம் பேசியதில்லை. நான் எம்ஜிஆர், என்டிஆர் கிட்டவே உதவி கோரி நின்றதில்லை. அப்புறம் ரஜினிகாந்தை எப்படி சந்தித்திருப்பேன்” இவ்வாறு நளினிகாந்த் அந்தப் பேட்டியில் பேசியிருக்கிறார்.