Karunas Joins Vetrimaaran : கடைசி வரை கற்றுக்கொள்வது... வெற்றிமாறனிடம் உதவி இயக்குநரான கருணாஸ்..
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இணைந்துள்ளார் நடிகர் கருணாஸ்.
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இணைந்துள்ளார் நடிகர் கருணாஸ். கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு. இது எப்போதும் எல்லோருக்கும் பொருந்தும் வள்ளுவனின் வாக்கு. இந்த வாக்கிற்கு இணங்க செயல்பட்டிருக்கிறார் கருணாஸ். அவரை சினிமா உலகம் மீண்டும் வாழ்த்தி வரவேற்கும் என்பதில் ஐயமேதுமில்லை.
தான் உதவி இயக்குநராக இணைந்தது குறித்து கருணாஸ் அளித்துள்ள பேட்டியில், "என் கலை வாழ்வை கானா பாடகராக தொடங்கினேன். எனக்கு சினிமாதான் இவ்வளவு பெரிய அடையாளத்தை கொடுத்தது. தமிழ் சினிமா என் தாய்மடி. அதிலேயே இனி முழுநேரமும் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறேன். அதற்காக ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற இருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சினிமாவின் சிறப்பு.
இப்போதும் நிறைய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும், தமிழர் வீரத்தைப் பறைசாற்றும் இந்தப் படத்தில் பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். ராமனுக்கு அணிலாக இருப்பதை போல, இந்த வெற்றி அணியில், வெற்றிமாறனுக்கு நானும் ஓர் அணிலாக இருக்க விரும்பினேன். நீண்ட காலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குநர் கனவை வாடிவாசல் திறந்துவிட்டுள்ளது" என்று நெகிழ்ச்சி பொங்க பேசினார்.
வெற்றிமாறனின் வாடிவாசல்..
வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார். இப்படம் இவர்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் முதல் திரைப்படம் ஆகும். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படத்திற்காக நடிகர் சூர்யா கேரள களரி வித்தை உள்ளிட்ட பல வித்தைகளைக் கற்றுள்ளார்.
பிளாட்ஃபார்ம் டூ எம்எல்ஏ
கருணாஸ் கடந்துவந்த பாதை மிகவும் சவாலானது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை எனும் கிராமத்தில் பிறந்தவர் கருணாஸ். 2001 ஆம் நந்தா படத்தில் லொடுக்குப் பாண்டி என்ற கதாபாத்திரம் மூலம் கருணாஸ் தமிழ்த் திரையில் அறிமுகமானார். அந்த கதாபாத்திரம் அவருக்கு பெரும் அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. அதன் பிறகு நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துவிட்டார். ராஜாதி ராஜா, அம்பாசமுத்திரத்தில் அம்பானி, காசேதான் கடவுளடா படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். அதுதவிர சில பாடல்களையும் பாடியுள்ளார். திரையில் மட்டுமல்லாமல் ஓட்டல் துறையிலும் கருணாஸ் தடம் பதித்தார். மனைவி கிரேஸுடன் இணைந்து லொடுக்கு பாண்டி
ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் ஓட்டல் நடத்தினார். அதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இவர் முக்குலத்தோர் புலிப்படை என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் அந்த தேர்தலில் 8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். தான் எம்.எல்.ஏ. ஆன பின்னர் அவர் அளித்தப் பேட்டியில் சென்னை சேத்துப்பட்டில் எம்.எல்.ஏ. ஹாஸ்டல் வளாக நடைமேடையில் நான் படுத்துறங்கிய காலமும் உண்டு. சினிமா என்னை சட்டசபை வரை கூட்டி வந்துள்ளது என கண்கலங்கிப் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் தான் அவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இணைந்துள்ளார்.