Actor Jeeva Accident: அச்சச்சோ! மனைவியுடன் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா - என்னாச்சு?
கள்ளக்குறிச்சி அருகே பிரபல நடிகர் ஜீவா கார் விபத்தில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை.
தமிழ் திரைப்பட உலகின் பிரபல நடிகர் ஜீவா. இவர் தனது மனைவியுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று வந்து கொண்டிருந்தார். அப்போது, காரில் அவர் சாலையின் குறுக்கே வேகமாக வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக குறுக்கே ஒருவர் வந்தார். இதனால், அவர் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக ஜீவா காரை திருப்பினார். அப்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய ஜீவா:
நடிகர் ஜீவா தனது மனைவி சுப்ரியாவுடன் சென்னைக்கு இன்று திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூரில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது. ஜீவா தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இரு சக்கர வாகனம் வந்ததாலே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பகுதியில் இருந்த மக்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிய ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டனர். இதில் காரின் முன்பக்கம் மிக மோசமாக சேதம் அடைந்தது.
போலீஸ் விசாரணை:
இதில், ஜீவாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் ஏற்படாமல் தப்பித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு சின்னசேலம் போலீசார் வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கிய காரை மீட்டனர். மேலும், ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினர் வேறு ஒரு கார் மூலமாக சேலத்திற்குச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.