Janagaraj: திடீரென வீசப்பட்ட கல்.. சிதைந்த முகம்.. நடிகர் ஜனகராஜ் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
Janagaraj: புதுச்சேரி போய்விட்டு ஊருக்கு காரில் திரும்பும் வழியில் திடீரென முகத்தில் கல் போன்ற ஏதோ ஒன்று வந்து மேலே பட்டது. காரை நிறுத்திப் பார்த்தால் காது பக்கத்தில் இருந்து ரத்தம் வந்தது.

தன் மீது கல்லெறிந்ததால் முகத்தின் அமைப்பு மாறியதாக நடிகர் ஜனகராஜ் (Janagaraj) நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1980, 1990 காலகட்டங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர், வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் தன்னுடைய வித்தியாசமான வசன உச்சரிப்பின் மூலம் அசத்தியவர் ஜனகராஜ். அப்படிப்பட்ட அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு “96” படத்தில் நடித்தார். இப்படம் 2018ஆம் ஆண்டு வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமாவில் ஜனகராஜை கண்ட ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு போயினர்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ஜனகராஜ் என்பதே என்னுடைய இயற்பெயர் தான். மக்கள் குரல் பத்திரிகையின் எடிட்டர் ராம்ஜி தான் இந்தப் பெயரை பெருமைப்படுத்தினார். எங்கப்பா பள்ளி முடிச்சதும் காலேஜ் சேர்ப்பாங்கன்னு நினைச்சா அந்த மாதிரி நடக்கல, என்னை வேலைக்கு போக சொல்லிட்டார். நான் முதலில் வேளாண் துறை, ஜெமினி லேப்பில் கலர் செக்கிங் என 3 இடங்களில் வேலை செய்தேன். இசை மீது இருந்த ஆர்வத்தில் எங்க வீட்டில் வாடகைக்கு இருந்து சினிமாவில் முயற்சி தேடி கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து பணியாற்றினேன்.
என்னதான் இன்றைக்கு ஏகப்பட்ட தொழில்நுட்ப விஷயங்கள் வந்தாலும் நடிகர்களுக்கு முகம் தான் வலிமை சேர்க்கக்கூடிய விஷயமாகும். பாலைவனச்சோலை படத்துக்குப் பிறகு எனக்கு ஏற்பட்ட விபத்தில் முகமே மாறிவிட்டது. மறைந்த இயக்குநர் ராஜசேகரின் தங்கை திருமணம் புதுச்சேரியில் நடந்த நிலையில் அங்கு போய்விட்டு ஊருக்கு காரில் திரும்பும் வழியில் திடீரென முகத்தில் கல் போன்ற எதோ ஒரு வந்து மேலே பட்டது. காரை நிறுத்தி விட்டு லைட் போட்டு பார்த்தால் காது பகுதியில் ரத்தம் வந்தது.
என்னுடைய வெள்ளை உடை முழுக்க இரத்தமாக இருந்தது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் என்னைச் சுற்றி மருத்துவர்கள் இருந்தனர். ராஜசேகர் கையில் கல் இருந்தது. வெளியே இருந்து தான் கல் வந்தது. காரின் கண்ணாடி திறந்து இருந்ததால் மேலே பட்டது. அங்கிருந்த கண்ணாடியை பார்க்கக் கூடாது என நர்ஸ் சொன்னார். நான் அதையும் மீறி பார்த்தால் முகம் ஒரு பக்கமாக வீங்கியிருந்தது. என்னுடைய சினிமா வாழ்க்கையே காலி என நினைத்தேன். அதன்பிறகு வேறு மருத்துவமனைக்கு வந்து முகத்தில் தையல் போட்டு பற்களை கட்டி கிட்டத்தட்ட 6 மாதம் சிகிச்சை பெற்றேன். 6 மாதம் நான் பட்ட வலியை சொல்ல முடியாது. திடீரென பாரதிராஜா என்னை வர சொல்லி சொல்லியிருந்தார். எனக்கு முகமே சரியாகவில்லை, பயமாக இருந்தது. “நீதான் ஹீரோவாக நடிக்கிறாய்” என சொன்னார்.
என் மீது கல்லெறிந்த இடத்தில் வழக்கமாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் எனக் கூறினார்கள். அடிபட்டு வண்டியை நிறுத்துபவர்களிடம் இருப்பதைப் பறிக்க இப்படி நடப்பதாக சொன்னார்கள்” என ஜனகராஜ் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

