Vijay: அரசியலில் அடியெடுத்து வைத்த விஜய்! சரமாரியாக கேள்வி கேட்ட போஸ் வெங்கட்!
நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் போஸ் வெங்கட்
எந்த விதமான பொதுப்பணியிலும் அனுபவம் இல்லாமல் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் போஸ் வெங்கட்
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருகைத் தருவதை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உறுதிபடுத்தினார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த ரசிகர் அமைப்பை கட்சியாக பதிவு செய்த விஜய், தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். சமீப காலமாக விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்த சூழலில் விஜய் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட நீண்ட அறிக்கை அரசியலில் தனது லட்சியம் என்னவென்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், அவர் இந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அடுத்ததாக 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்றும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்கள் தொடங்கி உள்ளன.
அடுத்த விஜயகாந்த் விஜய் தானா?
விஜய் அரசியலுக்கு வரும் தகவல் வெளியானதில் இருந்து அவரை தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பலர் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க. கட்சி தொடங்கி, பெரும் வரவேற்பை பெற்று பின் பெரும் தொய்வை எதிர்கொண்டது. அதே போல் நடிகர் விஜய்யின் கட்சியும் பலத்த வரவேற்பும் நம்பிக்கையுடன் தொடங்கி இந்த தொய்வை சந்திக்க வாய்ப்பிருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் விஜய்க்கு ஆதரவாக இருப்பவர்கள் நிச்சயமாக தமிழக அரசியல் களத்தில் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறி வருகிறார்கள்.
குறிப்பாக சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் விஜய் படவாய்ப்புகளை விட்டுவிட்டு அரசியலில் இறங்குவது அவருக்கு மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றுக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.
விஜய் குறித்து போஸ் வெங்கட்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தனியார் யூடியுப் சானல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் “ நான் பொதுவாழ்க்கையில் ஈடுபட இருக்கிறேன் என்றால் குறைந்தபட்சம் ஏதாவது வார்டில் செயலாளராக இருந்து மக்கள் பணி செய்திருக்க வேண்டும். ஒரு தலைமைப் பண்பு இருந்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் . என்னுடைய 19 வயதில் நான் ஆட்டோ சங்கத்திற்கு தலைவனாக இருந்தேன் , அந்த சங்கத்தைப் பற்றியும் அதன் நடைமுறைகள் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும்.
அதே போல் நடிகர் விஜய்காந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர், விஜய்காந்த் பிறவியிலேயே அரசியல்வாதி. பிறவியிலேயே தலைமைப் பண்பு கொண்டவர். தான் தலைவராக இருந்த நடிகர் சங்கம் கஷ்டபட்டபோது அதற்காக பாடுபட்டு அதை மீட்டெடுத்தார். விஜய்காந்த் மாதிரி விஜய் நடிகர் சங்கத்தின் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா? ஒன்றே ஒன்று சொல்கிறேன் விஜய் ஒரு முறை மேடை ஏறி பேசட்டு, அது வேறு யாராவது எழுதிக் கொடுத்து பேசினால் கூட பரவாயில்லை. அவருடைய நிலைப்பாடு என்ன என்பது தெரிந்துவிடும்” என்று போஸ் வெங்கட் கூறியுள்ளார்