Mayilsamy: 3 முறை பைபாஸ் ஆபரேஷன்.. டாக்டர் பேச்சை கேட்காத மயில்சாமி.. காரணத்தை விளக்கிய போண்டா மணி..!
தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி அதிகாலையில் மாரடைப்பால் காலமானார்.
மறைந்த நடிகர் மயில்சாமி எந்த சூழ்நிலையிலும் சோகமாக பார்த்தது இல்லை என நேர்காணல் ஒன்றில் நடிகர் போண்டாமணி கூறியுள்ளார்.
தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி அதிகாலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மரணம் திரையுலகினர், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சித்தார்த், செந்தில், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட எண்ணற்ற திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று மயில்சாமி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று அவரது உடல் வடபழனியில் உள்ள ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்ட நிலையில், நேர்காணல் ஒன்றில் நடிகர் போண்டாமணி மயில்சாமி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “மயில்சாமி இழப்பு பெரியது. நல்ல காமெடியன். அவர் இறந்தது ஆண்டவனுடைய அமைப்பு அவ்வளவு தான். 3 முறை இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். ஆனாலும் டாக்டர் சொன்னதை கேட்க மாட்டார். நான் இதுபற்றி கேட்டால், இருக்கும் வரை அனுபவித்து மக்களுக்கு நல்லது பண்ணிட்டு போக வேண்டியது தான் என சொல்வார்.
மயில்சாமி இறப்புக்கு அந்த ஏரியாவே அழுகிறது என்றால் அவரின் உதவும் மனப்பான்மையை பார்த்துக் கொள்ளுங்கள் . நான் 4 மாசமாக கிட்னி பாதிப்பால் ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்த போது ஓடோடி வந்தார். டாக்டர்களை சந்தித்து, போண்டா மணி சிலோனில் இருந்து வந்தவன். நாங்க எல்லோரும் இருக்கோம். எப்படியாவது காப்பாத்துங்க என சொல்லி, என் கையில ரூ. 1 லட்சம் திணித்தார்.
இது என்னுடைய காசு இல்ல. என்கிட்ட ரூ.5 ஆயிரம் தான் இருந்துச்சு. உனக்காக நான் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், சத்யராஜ், சரத்குமாரிடம் கேட்டு வாங்கிட்டு வந்தேன்னு சொன்னார். நான் ட்ரீட்மெண்ட் முடிஞ்ச பிறகு நான் பேட்டிக் கொடுத்தது தொடர்பாக கேட்டார். யாரையும் நம்ம குறை சொல்லக்கூடாது என அறிவுரை சொன்னார்.
4 நாளைக்கு முன்பு கூட எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் எல்லாமே சொல்லிட்டேன். ரிப்போர்ட் எடுத்துட்டு வான்னு சொன்னாரு. ஆனால் அதுக்குள்ள இறந்துட்டாரு. எனக்கு ஒரு கையே போன மாதிரி ஆயிடுச்சி. எப்போ போனாலும் செலவுக்கு காசு கொடுப்பாரு. என்னோட கல்யாண விஷயத்திலேயும் உதவி பண்ணாரு.
மயில்சாமியை இதுவரை நான் சோகமாகவே பார்த்தது இல்லை. டாக்டர் என்னை இறப்பு வீட்டுக்கு போகக்கூடாது என சொல்லி விட்டார். 6 மாதத்திற்குள் ஆபரேஷன் செய்யாவிட்டால் அவ்வளவு தான் என கெடு கொடுத்திருந்தார். மயில்சாமி உடலை பார்க்கப்போன இடத்தில் என் உயிர் போயிருந்தால் கூட சந்தோஷப்பட்ட இருப்பேன்” எனவும் போண்டா மணி கூறியுள்ளார்.