Bharath: வடமாநிலங்கள் பாவம்.. தமிழ்நாடுதான் டாப்.. நடிகர் பரத் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்!
வெப் சீரிஸூக்காக மொத்த வட இந்தியாவுக்கு நான் தான் சென்று வந்தேன். மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்டில் வாழும் மக்களின் வாழ்வியலை நம்மால் வாழ முடியாது.
வட இந்தியாவை ஒப்பீடும்போது தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை என நடிகர் பரத் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத் , ஆதித்யா மேனன்,ரம்யா நம்பீசன், சந்தான பாரதி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் “தலைமைச் செயலகம்”. அரசியல் பின்னணியை மையப்படுத்திய இந்த தொடர்ந்த கடந்த மே 17 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. இந்த வெப் சீரிஸின் ஷூட்டிங் வடமாநிலங்களில் பல பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பரத்திடம், “தலைமை செயலகம் வெப் சீரிஸில் தமிழ்நாடு, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசியிருக்கிறீர்கள். இந்த மொத்த விஷயங்களையும் கதை சொல்லும்போது இயக்குநர் சொன்னாரா?, படப்பிடிப்பில் அந்த மக்களின் வாழ்வியலை உங்களால் பொருத்தி பார்க்க முடிந்ததா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “இந்த வெப் சீரிஸூக்காக மொத்த வட இந்தியாவுக்கு நான் தான் சென்று வந்தேன். மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்டில் வாழும் மக்களின் வாழ்வியலை நம்மால் வாழ முடியாது. அவர்கள் ஏழ்மையின் உச்சத்தில் இருக்கிறார்கள். கொல்கத்தாவை எடுத்துக் கொண்டால் ஒரு பகுதி மட்டும் தான் அந்த பாலம், நகரத்துக்கான விஷயங்கள் இருக்கும் இடமாக பார்க்க முடியும். ஆனால் கொல்கத்தாவின் மறுபக்கம் ரொம்ப மோசமாக இருக்கிறது. அதையெல்லாம் ஒப்பீடும்போது தமிழ்நாடு எவ்வளவு நன்றாக இருக்கிறோம் என்பது புரியும்.
அந்த மாநிலங்களில் சின்ன பசங்க கூட கல்வி கற்க வழியில்லாமல் அங்குள்ள சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். ஒரு அம்மா குழந்தையை தன்னுடன் வைத்துக் கொண்டு தான் சுரங்கத்தில் வேலை செய்தார். அந்த ஒரு வயது குழந்தை உடலெல்லாம் கரியாக இருந்தது. வெப் சீரிஸில் காட்டப்பட்டுள்ள இடங்கள் நேரடியாக அங்கே சென்று படமாக்கப்பட்டது தான். அங்கு டாக்டர் கூட பெட்ரோல் பங்க் முன்னாடி டேபிள் போட்டு உட்கார்ந்து சிகிச்சையளிக்கிறார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த சூழலோடு அவர்கள் வாழ பழகியிருக்கிறார்கள்” என தெரிவித்திருக்கிறார்.
இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பலரும் பகிர்ந்து தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழக அரசையும் பாராட்டி வருகின்றனர்.