”என்னையா திட்டுன, எப்படி ஊருக்கு போறன்னு பாக்குறேன்னு மிரட்டுனாரு” : சீக்ரெட்ஸ் சொன்ன பெஞ்சமின்
தமிழில் திருப்பாச்சி, வசூல் ராஜா MBBS , வெற்றிக்கொடி கட்டு போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் பெஞ்சமின்.
தமிழில் திருப்பாச்சி, வசூல் ராஜா MBBS , வெற்றிக்கொடி கட்டு போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் பெஞ்சமின். இவரைப் பற்றி யோசித்தாலே வடிவேலுவை அவர் திட்டும் சீன் தான் நினைவுக்கு வரும். பெஞ்சமின் என்ற நடிகர் இருப்பதே அந்த சீக்வன்ஸ் மூலமாகத்தான் தெரிந்தது.
மேடை டூ சினிமா:
பெஞ்சமின் மேடை நாடகக் கலைஞராக இருந்தவர். அவருக்கு சினிமாவில் வாய்ப்புக் கொடுத்தது இயக்குநர் சேரன் தான். இயக்குநர் சேரனின் வெற்றிக்கொடி கட்டு படத்தில் பெஞ்சமின் வடிவேலுவுக்கு மச்சானாக வருவார். வடிவேலு துபாய் ரிட்டர்ன் பந்தாவில் பெஞ்சமின் பெருமை பீத்த அவரை கெட்ட வார்த்தையால் விளாசி தள்ளுவார் பெஞ்சமின். அந்தக் காட்சி படமாக்கப்பட்டது குறித்து பெஞ்சமின் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர், நான் முதல் நாள் வடிவேலு சாருடன் நடிக்கக் காத்திருந்தேன். சூட்டிங்குக்கு வந்த வடிவேலு சார். புதுப்பையனா ஒழுங்காக நடிப்பியா என்று கேட்டார். நான் அதற்கு, பாலச்சந்தர் சார் சிஷயன். அதெல்லாம் நல்லா நடிப்பேன். எந்த பயமும் இல்லை என்று சொன்னேன். அவ்வளவு தான் வடிவேலு சார் என்னை ரவுண்டு கட்டிட்டார். அந்தப் படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க சேரன் சார் திட்டமிட்டிருந்தார். 400 அடி ரீல் ரூ.15000க்கு விற்ற காலம் அது.
முதல் டேக் எல்லா வசனமும் பேசிவிட்டு வடிவேலு சாரை திட்ட வேண்டிய வசனம் வந்தது. அப்போது நான் ஸ்டிரக் ஆகிவிட்டேன். சேரன் சார் என்னப்பா 340 அடி போயிருச்சு என்று கத்திவிட்டு ஒன்மோர் டேக் சொன்னார். அப்போதும் முடியவில்லை. இப்படியே 4 டேக் போயிருச்சு. சேரன் சார் ரொம்பவே டென்ஷன் ஆயிட்டார். அப்புறம்தான் நான் அவரிடம் பிரச்சனையை சொன்னேன்.
சார் நீங்க பேசச் சொல்றீங்க. கேமராவை வடிவேலு சாருக்கு பின்னாடி வச்சிருக்கீங்க. நான் எப்படி பேசுறது. அவர் என் முன்னால் நின்று கொண்டு முகத்தில் ஆயிரம் பாவனை காட்டுகிறார். பேசு பார்ப்போம் என்பது போல் செய்கிறார் என்றேன். அடுத்த டேக் போகும்போது பார்த்திபன் சார் தலையிட்டார். வடிவேலு பேசி முடித்தவுடன் அவருடைய டிரைவரை அழைத்து காரை கொண்டுவரச் சொல்லி அவரை ஏற்றி அனுப்பினார். அப்புறம், வடிவேலு சாரை திட்டச் சொன்னார். இங்க பாரு அவரால ரூ.60,000 செலவாயிடுச்சு. அதை நினைச்சுகிட்டு திட்டு என்றார். அப்போது சின்ன தயக்கம் வந்தது. அவரே கெட்ட வார்த்தைகளில் திட்டிக் காட்டினார். அப்புறம் நான் பேசினேன். போதும்போதும் என்றளவுக்கு பேசி நடித்தேன். எல்லோருமே பாராட்டினார்கள்.
மிரட்டிய வடிவேலு:
அதன் பின்னர் வடிவேலு என்னிடம் வந்து என்னை என்னையா திட்டுற , எப்படி நீ ஊருக்கு போகிறேன் என்று நான் பார்க்கிறேன் என்று ஆவேசமாகச் சொன்னார். இயக்குநர் சேரனும் பார்த்திபனும் வடிவேலுவை சமாதானம் செய்தார்கள். அந்த காட்சியை நீக்கி விடுங்கள் என்று வடிவேலு பிடிவாதமாகச் சொன்னார். ஆனால் சேரனோ, இல்லை ஏற்கனவே படத்தின் நீளத்தின் காரணமாக பல காட்சிகளை நீக்கி விட்டேன். அதனால் இந்த காட்சி இருக்கட்டும் என்று எவ்வளவோ சமாதானம் செய்து அந்த காட்சியை படத்தில் வைத்தார்.
அப்படி உருவான காட்சிதான் இன்று என்னை அடையாளப்படுத்தியுள்ளது.
இவ்வாறு நடிகர் பெஞ்சமின் பேசினார்.