Murali Atharva : தியேட்டருக்கு போன அதர்வா... கன்னத்தில் அறைந்த முரளி.. சுவாரஸ்ய பின்னணி இதுதான்..!
அதர்வா முரளி 2010 ஆம் ஆண்டு பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் முரளி சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
பள்ளியில் படிக்கும் போது தியேட்டருக்கு சென்றதற்காக அப்பா முரளி என்னை அடித்தார் என நடிகர் அதர்வா முரளி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் முரளி 60 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவரது மகன் அதர்வா முரளி அதே ஆண்டு பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் முரளி சிறு வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் ரிலீசுக்கு முன்னரே முரளி மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
அதர்வாவும் அதன்பின் பரதேசி, ஈட்டி, கணிதன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், இமைக்கா நொடிகள், 100 என பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே நன்கு பரீட்சையமாகியுள்ளார்.சில தினங்களுக்கு முன் அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் படம் வெளியானது. இப்படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் அதர்வா தனது அப்பா முரளி பற்றி பல நினைவுகளை தெரிவித்துள்ளார்.
அதில் தந்தை நடிகராக இருந்த நிலையில் நடிப்பதற்கு எனக்கு கூச்சம் இருந்தது. என்னுடைய தாத்தா தான் நான் நடிகனாக வேண்டும் என சொல்லுவார். 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் போது தான் எனக்கு படம் பார்க்கும் ஆசை வந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளியை கட் அடித்து விட்டு முதல் காட்சி நண்பருடன் பார்ப்பேன்.அதனை பார்த்த அப்பா ஒருநாள் என்னிடம் என்ன விருப்பம் என கேட்டார். நான் இயக்குநராக தான் விருப்பம் என சொன்னேன் என கூறியுள்ளார்.
அப்படித்தான் ஒருநாள் இந்தியில் வெளியான டான் படத்திற்கு பள்ளியை கட் அடித்து விட்டு சத்யம் தியேட்டருக்கு சென்றிருந்தேன். அன்றைக்கு பார்த்து ஏதோ ஒரு விடுமுறை விட்டு விட்டார்கள். அப்பா என்னை அழைத்து வர பள்ளிக்கு வந்துவிட்டார். அப்போது என் கையில் சிறிய மொபைல் போன் ஒன்று இருந்தது. அதில் என்னை அழைத்து எங்கு இருக்கிறாய் என கேட்கிறார். நான் பக்கத்து பள்ளியில் தான் இருக்கிறேன் என சமாளிக்கிறேன். நான் வெளியில் தான் நிற்கிறேன் என தெரிவித்தார். நான் உடனடியாக ஆட்டோவில் ஏறி பள்ளி வாசலில் இறங்கினேன். என்ன ஏதுவென்று எல்லாம் கேட்கவில்லை. பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டார். பின்னர் செல்போனை தூக்கி போட்டு விட்டு வண்டியில் ஏறு என என்னை அழைத்துச் சென்றார். அந்த சம்பவம் என்னால் மறக்க முடியாது என அதர்வா முரளி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்