Actor Arya: ‛பிளஸ்ட் வித் பேபி கேர்ள்’ ஆனந்தத்தில் ஆர்யா தம்பதி!
கஜினிகாந்த் படத்தில் நடித்தார் ஆர்யா. அப்போது ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
நடிகர் ஆர்யாவுக்கும் அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷாவுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள சார்ப்பட்டா பரம்பரை திரைப்படம் தமிழ்த் திரை ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கும் வெற்றி மகிழ்ச்சியில் இருந்து வெளிவருவதற்குள் ஆர்யாவுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக வந்துள்ளது மகளின் பிறப்பு.
ஆம், நடிகர் ஆர்யா சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் தம்பதி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் வாழ்த்துகளை குவித்துவருகின்றனர். ரசிகர்களும் இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்தைத் தெரிவிக்க தவறவில்லை. டபுள் சக்சஸ் என ரசிகர்கள் ஆர்யாவைக் கொண்டாடி வருகிறார்கள்.
ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷால் ட்விட்டர் பக்கத்தில், இந்தச் செய்தியைப் பகிர்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். நண்பர் ஜேமிக்கு (ஆர்யாவை அவரது நண்பர்கள் ஜேமி என்றே அழைக்கின்றனர்) பெண் குழந்தை பிறந்துள்ளது. படப்பிடிப்புக்கு இடையே நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஆர்யா, சாயிஷா தம்பதிக்கு எப்போதுமே நல்லது நடக்கும். இன்ஷா அல்லா எனப் பதிவிட்டுள்ளார்.
திரையுலகில் விஷால், ஷ்யாம், பரத் ஆகியோர் ஆர்யாவின் சிறந்த நண்பர்களாக அறியப்படுகிறார்கள்.
கஜினிகாந்தில் கனிந்த ஜேமியின் காதல்..
ஆர்யாவின் திருமணம் பற்றி எப்போதுமே திரையுலகில் ஏதாவது வதந்தி வந்து கொண்டே இருக்கும். கலர்ஸ் தொலைக்காட்சியில் அவர் பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கூட ஆர்யாவின் திருமண சர்ச்சைகளையே கருவாக்கி உருவானது தான். அந்த நிகழ்ச்சியில் அழகுப் பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்யாவை இம்ப்ரஸ் பண்ணக் காத்திருக்க, இறுதிச் சுற்றில் முடிவைச் சொல்லாமல் கல்தா கொடுத்தார் ஆர்யா. இதனால், பல அழகிய இதயங்கள் நொறுங்கிப் போயின.
இந்த நிகழ்ச்சிக்கு இளம் பெண்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதே அளவுக்கு சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியது. எதிர்ப்புகளின் ஊடேயே அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் தான் கஜினிகாந்த் படத்தில் நடித்தார் ஆர்யா. அப்போது ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2019ல் கரம்பிடித்தனர். சாயிஷா ஷேகல் பாலிவுட் பிரபலம், பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் திருமணத்துக்குப் பின்னர் வந்த படம்தான் டெடி. அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் கூட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பின்னரும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது ஆர்யா, சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.