சூது கவ்வும் இயக்குநர் படத்தில் நடிக்கும் ‛சார்பட்டா’ ஆர்யா!
சார்பட்டவின் வெற்றிக்கு பிறகு, தந்தையாகிவிட்ட நடிகர் ஆர்யா சிறிய இடைவெளிக்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.
நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, 'கஜினிகாந்த்' படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். கடந்த முறை லாக்டவுனில் கூட சாயிஷா சற்றே குண்டாக இருந்ததால் ஏதாவது விசேசமா? என கேட்டு நச்சரித்து வந்த ரசிகர்கள், அவர் கர்ப்பமாகவே இருந்ததாக வதந்திகளை பரப்பினர். ஆனால் அதற்கு சாயிஷா அப்போது மறுப்பு தெரிவித்ததோடு, வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் திரையுலக நட்சத்திரங்களான ஆர்யா - சாயிஷா தம்பதி குறித்து மிகவும் மகிழ்ச்சியான செய்தியை அவர்களுடைய நண்பரான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். அதாவது விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "இந்த செய்தியை சொல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மாமாவாகி உள்ளேன், எனது சகோதரர் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது." என்று சந்தோஷமான தகவலை வெளியிட்டார். தந்தையான பிறகு ஓரிரு மாதங்கள் குழந்தையுடனும் மனைவியுடனும் நேரத்தை செலவழித்த ஆர்யா மீண்டும் படத்தில் நடிக்கபோகும் தேதியை அறிவித்துள்ளார்கள்.
நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, ஆர்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பெரிதாக பாராட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை 3, எனிமி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நலன் குமாரசாமி சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என இரு மறக்கமுடியாத திரைப்படங்களை தமிழுக்கு கொடுத்துவிட்டு அதன் பிறகு பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்தவர். தனியாக படம் செய்யாத போதிலும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு பகுதியின் திரைக்கதை எழுதியிருந்தார். பிறகு வேல்ஸ் தயாரிப்பில் வெளிவந்த குட்டி ஸ்டோரி என்னும் ஆந்தாலஜி படத்தில் ஆடலும் பாடலும் என்று விஜய் சேதுபதி, அதிதி பாலனை வைத்து இயக்கியிருந்தார். இருந்தாலும் நலனில் முழு நீள ஒர்க்கை பார்க்க அனைத்து சினிமா ஆர்வலர்கள்களும் காத்திருக்க, அதற்கான அறிவிப்பு தான் இப்போது வெளியாகியுள்ளது.
ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்க இப்பொழுது ஷூட்டிங் குறித்த முக்கிய அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது. முதற்கட்ட பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரியவந்துள்ளது. விரைவில் இதில் நடிக்க உள்ள இதர நடிகர் நடிகைகளின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நலன் குமாரசாமியின் இயக்கத்தில் முதல் முறையாக இணையும் இந்த திரைப்படம் ஆக்சன் திரைப்படமாக உருவாகிறது. நலனின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது.