‛ஒன்னா தான் சுத்துனோம்... வாய்ப்பு வந்ததும் காரில் ஏறி கண்டுக்கல...’ - பழையதை பகிர்ந்த ரமேஷ் கண்ணா!
ஆண்பாவம் அசிஸ்டண்ட்ன்னா அவ்வளவு பெருமை, ஏன்னா இளையராஜா ரெக்கார்டிங் எங்களுக்கு. அன்னைக்கு தேதில, இளையராஜா டேட் கொடுத்துட்டா நீ டைரக்டர்… இளையராஜா டேட் கொடுத்துட்டா நீ ப்ரொட்யூசர்…
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இருந்து வருபவர்களில் எப்போதும் மக்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருப்பவர் ரமேஷ் கண்ணா. நகைச்சுவை நடிகர், இயக்குனர், கதாசிரியர் ஆகிய ரமேஷ் கண்ணா சமீபத்தில் ஒரு பேட்டியில் பாண்டியராஜ் குறித்தும், விவேக் குறித்தும், அவர்களுடன் தனது நட்பு குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை கொடுத்துள்ளார்.
அவர் பேசுகையில், "அந்த காலகட்ட சினிமாவுலலாம், அசிஸ்டண்ட் டைரக்டருக்கு வாய்ப்புகள் திடீர்ன்னு வரும், ஒரு படத்துல வேல செய்ஞ்சிட்டு இருக்கும்போது, யாராவது ஒரு அசிஸ்டண்ட் சுறுசுறுப்பா வேல செஞ்சிட்டு இருந்தா, அந்த படத்துல நடிக்குற நடிகர் வந்து புரொடக்ஷன் கம்பெனி நம்பர் கொடுத்து, 'கத வச்சுறுகியா? போய் கதை சொல்லு'ன்னு சொல்லுவார். ஒரு ப்ரொட்யூசர் வந்தா அவர் பாத்துட்டு 'பிரபு கால்ஷீட் என்கிட்டதான் இருக்கு, பிரபுக்கு கத இருக்கா?' என்பார். அப்டிதான் வாய்ப்புகள் வரும் புதுமுக இயக்குனர்களுக்கு. இப்போலாம் யார் அப்படி பண்றா? நம்பர டெலிட் பண்ணிட்டு போயிடுவாங்க. அப்படிதான் அப்போ நான் பாண்டியராஜன் எல்லாரும் பாக்யராஜ்கிட்ட அசிஸ்டண்ட். ரொம்ப திக் பிரெண்ட்ஸ், ரொம்ப க்ளோஸா பழகுனோம். இந்த மாதிரி ஒரு நிகழ்வுல பிரபுக்கு கத சொல்ல சான்ஸ் கெடச்சுருச்சு. கத ஓகே ஆகி, 'கன்னிராசி' பட அறிவிப்பு வந்திடுச்சு. ரொம்ப சந்தோஷமா நம்மாளுக்கு படம் கெடச்சுருச்சு, அவன்கிட்ட போயிடலாம் ன்னு போய் நிக்குறேன், அம்பாசிடர் கார் வந்து நிக்குது, பாண்டியராஜன் வர்றாரு, கார்ல ஏறி உக்காந்து ஜன்னல்ல கைய வச்சு நேரா பாத்துட்டு உக்காந்திருக்கார்.
நானும் கார சுத்தி சுத்தி வந்து நின்னு வணக்கம் வச்சு பாக்குறேன், கண்டுக்கவே இல்ல. நேரா பாத்துட்டு உட்காந்திருக்கார். என்னடா இவரு ஒண்ணா பழகுனாரு. ஒண்ணா சைக்கிள்ல சுத்தினாரு. ஒண்ணா படம் பத்தாரு. இப்போ கண்டுக்கவே மாட்றாரேன்னு ஒரே ஆச்சர்யம். அப்போ என்னன்னா, ஒரு டைரக்டர் 3 அசிஸ்டண்ட் தான் வச்சுகனும். அதிகமா வச்சுக்கிட்டா பேட்டா கிடையாது. கார் கிடையாது. அதனால தான் அவருக்கு அந்த நிலம. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு பாத்தா, படம் ஃபைனான்ஸ் பிராப்லமாகி ரெண்டு நாள் ஷூட்டிங்கோட நின்னு போச்சு, பிரபு கால்ஷீட் வேஸ்ட்டா போகுது. அசிஸ்டண்ட் ரெண்டு மூணு மாசம் சம்பளம் இல்லனா, போய்டுவான்… அப்புறம் மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பிக்கவும், அசிஸ்டண்ட் தேவைப்படும்போது எங்களை சேர்த்துகிட்டார். அப்படியே படம் ரிலீஸ் ஆச்சு ஹிட்டு… ரெண்டாவது படம், ஆண்பாவம் அது சூப்பர் ஹிட்டு… அப்போலாம் அப்டியே திமிரா சுத்துவோம், 'ஆண்பாவம் அசிஸ்டண்ட் வற்றாங்கடா' ன்னு மரியாதையா பேசுவாங்க. ஆண்பாவம் அசிஸ்டண்ட்ன்னா அவ்வளவு பெருமை. ஏன்னா இளையராஜா ரெக்கார்டிங் எங்களுக்கு. அன்னைக்கு தேதில, இளையராஜா டேட் கொடுத்துட்டா நீ டைரக்டர்… இளையராஜா டேட் கொடுத்துட்டா நீ ப்ரொட்யூசர்… ஏன்னா படங்கள் பாட்டுக்காகவே பிச்சிக்கிட்டு ஓடும்." என்று ஆண்பாவம் திரைப்படம் குறித்தும், பாண்டியராஜன் அசிஸ்டண்ட் ஆனது குறித்தும் தெரிவித்தார் ரமேஷ் கண்ணா.
மறைந்த நடிகர் சின்னக்கலைவானர் விவேக் குறித்து பேசுகையில், "அப்பலாம் நாங்க ஹ்யூமர் கிளப்ன்னு ஒரு இடத்துக்கு போவோம். கலாக்கேந்த்ரா கோவிந்தராஜ்ன்னு ஒருத்தர் இருக்காரு. அவர் நடத்துறது தான் அது. அங்க எல்லாரும் வந்து ஜோக் சொல்லுவாங்க. சண்டே சண்டே நடக்கும். அங்க விவேக்கும் வருவார். அவர் அப்போவே பயங்கரமா காமெடி பண்ணுவார். நான் கதையெல்லாம் எழுதுறொமேன்னு அங்க போவேன். அப்படிதான் அவரு பழக்கம், அவர் மூலமாதான் பாலச்சந்தர் எல்லாம் பழக்கம். அப்போ விவேக் நடிச்சு முதல் படம் ரிலீஸ் ஆயிடுச்சு, ஹ்யூமர் கிளப்ல 'அவரு ஜோக்கெல்லாம் நல்லாதான் சொல்றாரு. ஆனா அழுதாதான் நமக்கு சிரிப்பு வந்திடுது'ன்னு கலாய்க்கிறாங்க. அன்னைக்கு விவேக் வரல, நான் சொன்னேன். நம்ம ஹ்யூமர் கிளப்ல இருந்து ஒருத்தர் நடிக்க போயிருக்காரு. ஆரம்பத்துல கமலே ட்ராமட்டிக்காதான் அழுவார்' ன்னு சொன்னதும் அவரை எல்லாரும் பாராட்டினாங்க. இந்த விஷயம் விவேக்குக்கு தெரிஞ்சதும் நாங்க ரெண்டுபேரும் நல்ல திக் பிரெண்ட்ஸ் ஆக, அவர் நடிக்குற இடத்துல எல்லாம், ரமேஷ் கண்ணா நல்ல கதை வச்சுருக்காருன்னு சொல்வாரு. நான் விவேக்குக்கு கேரக்டர் வேணும் ன்னு கேப்பேன், அப்டியே அதையும் எல்லாரும் கலாய்க்க ஆர்பிச்சுட்டாங்க" என்று நகைச்சுவையாக கூறினார்.