28 Years of Aasai: அஜித்துக்கு முதல் ஹிட் கொடுத்த ‘ஆசை’ திரைப்படம்.. ரிலீசாகி இன்றோடு 28 ஆண்டுகள் நிறைவு..!
ஆசை படத்தில் அஜித்குமார், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகினி, பூர்ணம் விஸ்வநாதன், வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் தான் அஜித்துக்கு முதல் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த படம்.
நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அவரது தொடக்க கால சினிமாவுக்கு திருப்புமுனையாக அமைந்த ‘ஆசை’ படம் வெளியாகி இன்றோடு 28 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சூர்யா நடிக்க வேண்டிய படம்
இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி ‘கேளடி கண்மணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் வசந்த். தொடர்ந்து ‘நீ பாதி நான் பாதி’ படத்தை இயக்கிய அவர் மூன்றாவதாக இயக்கிய படம்தான் ‘ஆசை’. மணிரத்னம் தயாரித்த இப்படத்தில் அஜித்குமார், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகினி, பூர்ணம் விஸ்வநாதன், வடிவேலு, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இப்படம் தான் அஜித்துக்கு முதல் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த படம்.
முதலில் இப்படத்துக்கு ஹீரோவாக அணுகப்பட்டவர் நடிகர் சிவகுமாரின் மகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருக்கும் சூர்யாதான். ஆனால் நடிப்பதில் ஆர்வமில்லை என்பதால் இந்த வாய்ப்பை மறுக்கிறார். இதனிடையே ஒரு விளம்பரத்தில் நடிகர் அஜித்தை பார்த்து அவரை ஹீரோவாக்க முடிவு செய்தார் வசந்த். அதேபோல் வங்காள படத்தில் நடித்த சுவலட்சுமியை ஹீரோயினாகவும், பவர்ஃபுல் வில்லன் கேரக்டருக்காக பிரகாஷ்ராஜையும் ஒப்பந்தம் செய்தனர்.
படத்தின் கதை
கதைப்படி, பூர்ணம் விஸ்வநாதனுக்கு ரோகிணி, சுவலட்சுமி என இரண்டு மகள்கள். இதில் மூத்தவரான ரோகிணியின் கணவர் பிரகாஷ்ராஜ் ராணுவத்தில் வேலை செய்கிறார். விடுமுறையில் ஊருக்கு வரும் அவர் சுவலட்சுமி மீது சபலம் கொள்வார். ஆனால் சுவலட்சுமியோ அஜித்துடன் காதலில் இருப்பார். இதனிடையே சுவலட்சுமியை அடைய அவருடன் தொடர்பில் இருக்கும்படி ஒவ்வொன்றையும் செய்ய தொடங்குவார். அஜித்தை பற்றி தப்பான எண்ணத்தை பூர்ணம் விஸ்வநாதனிடம் ஏற்படுத்துவார். இதற்கிடையில் கணவர் செய்யும் தில்லு முல்லு ரோகிணிக்கு தெரிய வர, சுவலட்சுமியை அடைய கொலை செய்வார். வில்லத்தனத்தில் இறங்க இறங்க அஜித் - சுவலட்சுமி காதல் என்னானது?.. பிரகாஷ்ராஜ் நினைத்ததை சாதித்தாரா? என்பதே இப்படத்தின் கதையாகும்.
பிரமிக்க வைத்த நடிப்பு
உண்மையில் ஆசை படத்தின் ஹீரோ என்றால் அது பிரகாஷ்ராஜ்தான். நல்லவன், கெட்டவன் என இரட்டை வேடம் போடும் அவரின் ஒவ்வொரு செயலும் ரசிகர்களுக்கே ஆத்திரத்தை ஏற்படுத்தும். அஜித், கைக்குழந்தை, கடன் கொடுத்தவன் என அனைவரையும் வைத்து அவர் செய்யும் டிராமாக்கள் அக்மார்க் 100% வில்லத்தனம்.
ஒருகட்டத்தில் பிரகாஷ்ராஜ் பற்றிய உண்மைகள் தெரிய வர, தன் காதலி சுவலட்சுமியிடம் அதனை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதேசமயம் பிரகாஷ்ராஜ் செயலால் அது இயலாமல் போகும்போது தவிப்பையும் கோபத்தையும் வெகு அழகாக காட்டியிருப்பார். இந்த படத்துக்குப் பின் அஜித் அனைவராலும் ’ஆசை நாயகன்’ என செல்லமாக அழைக்கப்பட்டார். அதேபோல் ஒரு மகளை கொன்று, இன்னொரு மகளை அடைய நினைக்கும் பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் தெரிய வரும்போது பூர்ணம் விஸ்வநாதன் எடுக்கும் பழிவாங்கலுக்கு தியேட்டரே கைதட்டி கொண்டாடியது.
சுவலட்சுமியின் அழகும், இளமையும், கவி பாடும் கண்களும் என அட்டகாசமான அறிமுக படமாக அமைந்தது ‘ஆசை’.
தேனிசை பாடல்களை கொடுத்த தேவா
ஆசை படத்துக்கு தேவா கொடுத்த இசை படத்தின் மீது ரசிகர்களுக்கு விறுவிறுப்பை கூட்டியது. வாலி, வைரமுத்துவின் வரிகளுக்கு அவர் போட்ட இசை இன்றைக்கும் பலரின் காதுகளில் ரீங்காரமிடுகிறது. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகமாக அமைந்தது. ’ஆசை’ படம் வெளியாகி இன்றோடு 28 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்படம் ரசிகர்கள் மட்டுமல்ல.. அஜித்துக்கும் மறக்க முடியாத ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.