Ajithkumar: ‛உண்மையாவே இது அவர்தானா...’ : அடுத்தடுத்து போட்டோஸ்... UK-ல் AK...!
‛‛இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அஜித் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார் என்று தான் தெரிகிறது’’
முன்னுரை, முகப்புரையெல்லாம் தேவையில்லை. அஜித் என்றாலே ஆரவாரம் தானாக வரும். சினிமாவின் அத்தனை ஃபார்முலாக்களையும் அடித்து நொறுக்கி, தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித், திரையில் மட்டுமே வருவதை தன் கொள்கையாக வைத்திருக்கிறார். அவரது பார்க்க வேண்டுமானால், அது திரையில் மட்டும் தான் என்பதால், அவரது ரசிகர்கள், அஜித் தோன்றும் வெள்ளித்திரையை ஆவலோடு காத்திருந்து எதிர்பார்ப்பார்கள்.
அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தொடர்ந்து நடிகர் அஜித் மெனக்கெடுவார் என்பதும், அதற்கு எல்லா வகை ரிஸ்கும் எடுப்பார் என்பதும் நாம் அறிந்தது தான். ஆரம்பத்தில் பைக் ரேஸராக தன் வாழ்க்கையை தொடங்க நினைத்த நடிகர் அஜித்திற்கு, அதில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் வலிகள் அனைத்துமே அவர் சினிமா பக்கம் கரை ஒதுங்க காரணமானது.
ஆனாலும் சினிமாவில் நடித்தாலும் அவருக்கு ரேஸ் தாகம் கொஞ்சமும் குறையவில்லை. அவ்வப்போது கார் ரேஸ் சென்று கொண்டிருந்தவர், ஒரு படி மேலே போய் விமானப்பயிற்சி அது இது என வேறொரு பரிமாணம் எடுத்தார். எதுவெல்லாம் முடியாது என்று யோசிக்க நினைத்தார்களோ, அதையெல்லாம் முடியும் என்று கடத்தி காட்டினார். வலிமையில் அவரது பைக்சாகசங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் பைக் ஒன்றை எடுத்து உலகம் சுற்றத் தொடங்கியிருக்கும் அஜித், தற்போது இங்கிலாந்தின் தெருக்களில் இன்பமாக உலா வந்து கொண்டிருக்கிறார். இங்கிலாந்தின் பிரபலமான கட்டடங்களுக்கு முன் நின்று போஸ் கொடுக்கும் அஜித், அதை நண்பர்கள் வாயிலாக பகிர்ந்து வருகிறார். இந்த அஜித்தை இதுவரை யாரும் பார்த்தவில்லை. தன்னைப்பற்றிய சுயக்குறிப்புகளை இதுவரை ரகசியமாகவே வைத்திருந்த அஜித், இப்போது போட்டி போட்டு பகிர்ந்து கொண்டிருக்கிறார் . இது அஜித்திடம் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்.
இதை தான் அவரது ரசிகர்கள் , அஜித்திடம் எதிர்பார்க்கின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அஜித் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார் என்று தான் தெரிகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனிக்கபூர் தயாரிக்கும் படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்ததாக விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். ஒருபுறம் வினோத் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க, மறுபுறம் அஜித் ஹாயாக ‛உலகம் சுற்றும் வாலிபனாக’ வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தாடி அஜித்திற்கு புதிதல்ல... பைக் அஜித்திற்கு புதிதல்ல... புதுமை அஜித்திற்கு புதிதல்ல... ஆனால், இதையெல்லாம் வெளிப்படுத்தும் அஜித், உண்மையிலேயே புதுமையாக தெரிகிறார். தொடரட்டும் இந்த புதுமை மிஸ்டர் ஏ.கே.!