12 Yrs Of MANKATHA: அஜித்தின் 50வது படம்.. தியேட்டரை திருவிழாவாக மாற்றிய ‘மங்காத்தா’ படம் ரிலீசாகி 12 வருஷங்களாச்சு..
நடிகர் அஜித்தின் 50வது படம் என்ற பெருமையோடு ரீலிசான ‘மங்காத்தா’ படம் இன்றோடு 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
நடிகர் அஜித்தின் 50வது படம் என்ற பெருமையோடு ரீலிசான ‘மங்காத்தா’ படம் இன்றோடு 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
அஜித்தின் 50வது படம்
சினிமாவில் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் 25, 50,75,100வது படங்கள் என்றும் ஸ்பெஷலாக இருக்கும். அதனை அதிரிபுதிரி ஹிட்டடிக்க வைக்க ரசிகர்களும் ரெடியாகவே இருப்பார்கள். ஆனால் கொண்டாட வைக்கும் அளவுக்கு படம் இருக்க வேண்டும் அல்லவா. அப்படிப்பட கொண்டாடப்பட வைத்த படங்களில் ஒன்று தான் ‘மங்காத்தா’. இது நடிகர் அஜித்தின் 50வது படமாகும்.
வெங்கட் பிரபுவின் திரை வாழ்வில் திருப்புமுனை
ஆரம்ப காலக்கட்டத்தில் இளம் நடிகர்களுடன் பணியாற்றி வந்த இயக்குநர் வெங்கட்பிரபு முதல் முறையாக மங்காத்தா படம் மூலம் முன்னணி நடிகரான அஜித்துடன் இணைந்தார். இந்த படத்தில் த்ரிஷா, வைபவ், அஞ்சலி, அர்ஜூன், ஆண்ட்ரியா, பிரேம்ஜி அமரன், லட்சுமி ராய், மகத் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.
படத்தின் கதை
காவல் அதிகாரியான அஜித் குற்றம் ஒன்றுக்காக பணிநீக்கம் செய்யப்படுகிறார். அவரும் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப் புள்ளியாக இருக்கும் ஜெயப்பிரகாஷின் மகளான த்ரிஷாவும் காதலர்கள். இதனிடையே சூதாட்ட கும்பலை பிடிக்கும் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக அர்ஜூன் வருவார். அதேசமயம் ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி பணம் மும்பை வந்து பிரியப்போவதாக தகவல் வருகிறது.
இந்த கும்பலை பிடிக்க அர்ஜூன் குழுவினர் களமிறங்க, மறுபக்கம் ஜெயப்பிரகாஷிடம் வேலை செய்யும் வைபவ், தன் நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார். இதனை தெரிந்து கொண்ட அஜித்தும் இதில் பங்கேற்க, இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது? என்பதை கிளைமேக்ஸ் ட்விஸ்ட் வைத்து அசத்தியிருந்தார் வெங்கட் பிரபு.
கெட்டப்பை மாற்றிய அஜித்
இந்தப் படம் வெளியாவதற்கு முன் தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்திருந்தார் அஜித். இதனால் சர்ச்சைகளில் சிக்கிய அவரின் 50வது படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தலைமுடிக்கு டை அடிக்காமல் முதல் முறையாகசால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றி பிற நடிகர்களை வியக்க வைத்தார். வாலி படத்துக்குப் பின் முழுக்க முழுக்க நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். தனது மேனரிசங்களால் படம் முழுக்க ரசிகர்களை திருப்திப்படுத்தியிருந்தார்.
அவருக்கு இணையாக அர்ஜூனின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. சொல்லப்போனால் அர்ஜூனின் இரண்டாவது இன்னிங்ஸிற்கு மிகச்சிறந்த படம் மங்காத்தா தான். த்ரிஷா, ஜெயப்பிரகாஷ். வைபவ், பிரேம்ஜி, அஞ்சலி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு என அனைவரும் ரசிக்க வைத்தனர்.
மிரள வைத்த மங்காத்தா தீம் மியூசிக்
படத்துக்கு யுவன் இசை என்றால் சொல்லவா வேண்டும். எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்டாயின. குறிப்பாக பின்னணி இசை, மங்காத்தா தீம் மியூசிக் என அனைத்து இன்றும் ரசிகர்களின் கால்ர் ட்யூனாக இருக்கிறது. பரபரப்பான திரைக்கதையில் ட்விஸ்ட்கள், நகைச்சுவை, காதல், சோகம் என அனைத்தையும் கொடுத்து ஒரு பொழுதுபோக்கு படம் கொடுத்து அசத்தினார் வெங்கட் பிரபு.
படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டண்ட், இடைவேளைக் காட்சி, பிணைக் கைதியாக ஆண்ட்ரியா இருக்கும்போது ப்அர்ஜுனுடன் போனில் பேரம் பேசும் காட்சி, கிளைமேக்ஸ் ட்விஸ்ட் என அனைத்தும் மிகச்சிறப்பாக திரைக்கதையில் கையாளப்பட்டிருந்தது. அஜித் ரசிகர்களுக்கு மறக்க முடியாத கமர்ஷியல் ட்ரீட்டாக அமைந்த மங்காத்தா என்றைக்கும் கொண்டாட்டப்படக்கூடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.