சொந்த கனவுகள், லண்டனில் பெற்ற முதுகலைப் பட்டம், லட்சியம் எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தேன்..ஆர்த்தி ரவி வேதனை
நடிகர் ரவி மோகன் உடனான விவாகரத்தில் தனக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்புவதாக ஆர்த்தி ரவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

சொந்த கனவுகளை துறந்தேன்
15 ஆண்டுகள் அவருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எனது சொந்த கனவுகள், லண்டனில் பெற்ற முதுகலைப் பட்டம், லட்சியம் என
அனைத்தையும் துறந்துவிட்டு வாழ்ந்தேன். வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி மீறப்பட்டது. அவருக்காக வாழாமல் எனக்காகவும் என் லட்சியங்களுக்காகவும் நான் வாழ்ந்திருந்திருந்தால், என் சொந்த அடையாளத்தில் இதைவிட இருமடங்கு வசதியான, உயர்வான ஒரு வாழ்கையை நான் வாழ்ந்திருப்பேன்.ஆனால் காதலின் பேரில் நம்பிக்கையின் பேரில் வாழ்ந்துவிட்டேன். நாங்கள் இதுவரை எடுத்த அனைத்து பொருளாதார முடிவுகளும் இருவரும் சேர்ந்து எடுத்தவைகளே. அதன் எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. அவை முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
என் கண்ணியமும் நேர்மையும் பொது விவாதமாக மாற்றப்பட்டுள்ளது
இந்த இக்கட்டான சூழலில் என்னுடன் துணை நிற்கும் செய்தித்துறை, சமூக ஊடகம், மற்றும் பொது மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பு உண்மையில் எனக்கு மிகுந்த பலம் அளிக்கிறது.‘மேலும் இத்தனை நெருக்கடியையும் தாங்கிக் கொண்டிருக்கும் என் இரண்டு பிள்ளைகள், எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மற்றும் என் நண்பர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய இந்த தனிப்பட்ட வேதனையை, பிரச்சனையை இப்படி நான் பொதுவெளியில் இந்த உலகிற்கு எடுத்துக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். இந்தச் சூழ்நிலையில் என் சுயகௌரவத்தை பாதுகாக்கவே இப்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
இத்தனை வருடங்கள் உங்களுக்காக உங்களோடு வாழ்ந்த ஒருத்தியை உதறித்தள்ள வேண்டும் என முடிவு எடுத்த நீங்கள் அதை கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம். இன்று, என் கண்ணியமும் நேர்மையும், உங்களால் ஒரு பொது விவாதமாக மாற்றப்பட்டுள்ளதை வேதனையோடு கடக்க முயற்சிக்கிறேன்.
எனக்கு நீதி கிடைக்க காத்திருக்கிறேன்
உண்மை தெரிந்த ஒரே நபர்,என் கணவர் எனக்காக நின்று பேச மறுக்கிறார். அவருடைய மௌனத்திற்குப் பின் ஒரு நோக்கம் உள்ளது. அவருக்கு நிம்மதி கிடைக்க உண்மையில் விரும்புகிறேன். ஆனால் அந்த நிம்மதி உங்களோடு எல்லா கடினமான நேரத்திலும் துணை நின்ற ஒருவரைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் கிடைக்காது.நான் பலவீனமானவள் இல்லை. என் மீது நம்பிக்கை கொண்டுள்ள அன்புக்குரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்பேன். ஒரு போதும் தாழ்ந்து போக மாட்டேன்.இதற்கு மேல் நான் பேச எதுவும் இல்லை.ஏனென்றால் நான் இன்னும் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கக் காத்திருக்கிறேன்.





















