A.R.Rahman | இந்தி மொழி சர்ச்சை: வைரலாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய பதிவு ! - அமித்ஷாவுக்கு பதிலடியா ?
தாய் மொழியான தமிழை எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்கவில்லை. மொழிப்பற்று அதிகம் உடையவராகத்தான் பொது மேடைகளில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார்
மாநிலங்களுக்கு இடையே மக்களுக்கு ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை குறைத்து , அதிக அளவில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா 37வது பாராளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் தற்போதைய பதிவு ஒன்று இதற்கு பதிலடி கொடுப்பது போல உள்ளது.
View this post on Instagram
தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் அதில் ’தமிழணங்கு’ என்றும் ’இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்னும் பாரதிதாசன் வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் கையில் ழகரத்தை ஏந்திக்கொண்டு , கருத்த தேகம் கொண்ட ஒரு பெண் துள்ளிக்குதிப்பது போல படம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது .அணங்கு என்றால் தேவைதை குறிக்கும் என்கிறார்கள். அதன்படி , தமிழணங்கு என்பது தமிழ் தேவதை என பொருளாகிறது. இந்த பதிவு ஏ.ஆர்.ரஹ்மான் அமித்ஷாவிற்கு கொடுத்த பதிலடி என நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான ஆஸ்கர் விருது வரை சென்ற பொழுதும் தாய் மொழியான தமிழை எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்கவில்லை. மொழிப்பற்று அதிகம் உடையவராகத்தான் பொது மேடைகளில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். இந்தி மொழியால் ஏ.ஆர்.ரஹ்மான் சில அவமானங்களை பாலிவுட்டில் சந்தித்திருக்கலாம் என்பதே பலரின் கருத்து. அதற்கு ஏற்றார் போல பல பாலிவுட் மேடைகளிலும் தமிழ் மொழியில் பேசி அரங்கையே அதிர செய்திருக்கிறார். பாலிவுட் பிரபலங்கள் சிலர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் வேண்டுமென்றே இந்தியில் பேசினாலும் கூட அவர்களிடம் தமிழ் மொழியில்தான் பதில் கொடுப்பார் ரஹ்மான்.ஏ.ஆர்.ரஹ்மான் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 99 சாங்ஸ் . இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நாயகன் இஹான் பட் , ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ஏ ஆர் ரஹ்மானிடம் தமிழில் பேசிவிட்டு ஹீரோவிடம் தொகுப்பாளினி இந்தியில் பேசி வரவேற்றார். உடனே ஏ.ஆர்.ரஹ்மான் “இந்தியா ?” என கேட்டுவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினார். இது அந்த சமயத்தில் அந்த வீடியோ வைரலானதும் குறிப்பிடத்தக்கது.