Suryavamsam Movie: 'பாயாசம் சாப்டுங்க பிரெண்ட்' - 90கிட்ஸின் எவர்கிரீன் சூர்யவம்சம்!
ஹைலைட்டாக ’மத்தப்புள்ளைங்க எங்க? நம்ம சின்ராசு எங்க?’ , ’பாயாசம் சாப்டுங்க பிரெண்ட்’ போன்ற பேக்ரவுண்ட்டில் பி.ஜி.எம். விரியப் பேசும் வசனங்கள் இன்றளவும் மூவி ரெஃப்ரன்ஸ் மீம்களில் டாப்.
வருடம் 1997! டைட்டானிக் கப்பலில் ரோஸின் உயிரைக் காப்பாற்ற ஜாக் தத்தளிப்பதைப் பார்த்து உலகமே மனம்கனத்துக் கிடந்த அதே நேரம் நமது உள்ளூர் மியூசிக் சேனல்கள் ’ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ வுக்கு பாப்கார்ன் கொறித்துக்கொண்டிருந்தன. 2K கிட்ஸ்களின் மீம் வரலாற்றில் பல கண்டென்ட்களுக்கு டெம்ப்ளேட்களை அள்ளிக்கொடுத்த ‘சூர்ய வம்சம்’ திரைப்படத்தின் 25வது வருடம் இது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட், முன்னாள் காதலி-இந்நாள் காதலி , க்ளைஷேவான நாட்டாமை வகையறா கட்டைமீசை கேரக்டர்கள், தேனி டு கோவை மலைப்பகுதியின் பசுமையைத் தனது பின்னனி இசையால் ரசிகர்களுக்குக் கடத்திய எஸ்.ஏ.ராஜ்குமாரின் ‘லலலா’ இசை எனத் தனக்கேயான ஸ்டைலில் திரைப்படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர் விக்ரமன்.
பட்டித்தொட்டி முழுக்க படம் சக்கைபோடு போட்டதை 90ஸ் கிட்ஸ்கள் கண்கூடாகவே பார்த்தார்கள். அந்தளவுக்கு படம் சூப்பர் ஹிட்டாக அடுத்தடுத்து இந்தி, தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இயக்கப்பட்டது. அக்கட தேசத்திலும் படம் சூப்பர்ஹிட். நாட்டாமை அப்பா- நாலு பேருக்கு நல்லது செய்யும் மகன் உறவுச்சிக்கல்தான் கதை. இடையிடையே இட்லி உப்புமாவுக்கு மசால் வடை ,ஒரே பாடலில் பஸ் டிரைவர் பஸ் ஓனராகி பணக்காரராவது போன்ற படலங்களும் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும். 1988ல் உருவாக்கப்பட்ட இதன் ஒரிஜினல் ஸ்க்ரிப்டுக்கு விக்ரமன் தேர்வு செய்து வைத்திருந்தது என்னவோ நடிகர்கள் விஜயகுமாரும் கார்த்திக்கும். பின்னர் ஜனகராஜூம் விஜயும் நடிக்கவைக்கலாம் என யோசனை மாறி இறுதியாக சக்திவேல் -சின்ராசு என டபுள் ஆக்ஷன் சரத்குமாரில் வந்து நின்றது.
‘ஞாயித்துக்கெழமையான போதும் சின்ராச கையிலயே புடிக்கமுடியாது’ என மணிவண்ணன் பேசும் வசனத்துக்கு புல்லட்டில் பறந்துவரும் சரத்குமாரைப் போல வேறு யாரும் அந்தப் பாத்திரத்தை ஜஸ்டிஃபை செய்திருக்க முடியாதுதான். பின்னர் அதே போன்ற படங்களைத் திகட்டத் திகட்ட எடுத்துத்தள்ளிய இயக்குநர் ராஜகுமாரன் இந்தப் படத்தில் வரும் காட்சி கூடுதல் ஹைலைட். ஹைலைட்டாக ’மத்தப்புள்ளைங்க எங்க? நம்ம சின்ராசு எங்க?’ , ’பாயாசம் சாப்டுங்க பிரெண்ட்’ போன்ற பேக்ரவுண்ட்டில் பி.ஜி.எம். விரியப் பேசும் வசனங்கள் இன்றளவும் மூவி ரெஃப்ரன்ஸ் மீம்களில் டாப்.
போலீஸ் ஸ்டேஷனில் இ.பி.கோக்களை பட்டியலிடும் காட்சி, ஒரு பெண்ணிடம் அவள் சம்மதம் கேட்காமலேயே திருமணத்தை முடிவு செய்யும் குடும்பம் அதில் அந்தப் பெண்ணையே இறுதியில் நெகட்டிவ்வாகச் சித்தரிப்பது போன்ற சொதப்பல்கள் உட்பட படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ஒரே பாடலில் உழைத்து முன்னேறுவது போன்ற பாசிட்டிவ் பூஸ்டர் காட்சிகள்தான் இந்தப்படம் இளைஞர்களிடம் ஹிட்டானதற்கு முக்கியக் காரணம். படம் வெளியான சமயம் கோவில்பட்டியைச் சேர்ந்த பேப்பர் பொறுக்கும் தொழிலாளி ஒருவர் தான் தினமும் சூரியவம்சம் படம் பார்த்ததாகப் பேட்டியளித்திருந்தார். ’நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குது’ பல பட்டித்தொட்டி சின்ராசுகளுக்கு நம்பிக்கை.
நம்பிக்கையை விதைத்த இயக்குநர் விக்ரமனுக்கு 25ம் வருட வாழ்த்துகள்!