TN Urban Local Body Election 2022: ஒற்றை வாக்கு என்ன செய்துவிடும்?- ஒரு பார்வை
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒற்றை வாக்கு எங்கெங்கு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று பார்க்கலாம்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒற்றை வாக்கு எங்கெங்கு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்குத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மாநிலம் முழுவதும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே அதிக இடங்களைக் கைப்பற்றி வருகின்றன. இதனால் திமுகவினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ஒற்றை வாக்கால் என்ன செய்ய முடியும்? என்னுடைய ஒரு ஓட்டால் என்ன மாறி விடப்போகிறது என்று இனி யாரும் கேள்வி எழுப்ப முடியாது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒற்றை வாக்கு எங்கெங்கு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று பார்க்கலாம்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகராட்சி 9ஆவது வார்டில் மதிமுக வேட்பாளர் அந்தோணி ராஜனைவிட, அதிமுக வேட்பாளர் தமிழ்ச் செல்வன் ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக தமிழ்ச் செல்வன் 297 வாக்குகளும் மதிமுக அந்தோணி ராஜன் 296 வாக்குகளும் பெற்றனர். அதேபோல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி 8ஆவது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கீர்த்தனாவை ஒற்றை வாக்கில் தோற்கடித்தார்.
ஈரோடு மாவட்டம், பவானி சாகர் பேரூராட்சி 11-ஆவது வார்டில் பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று, தோல்வி அடைந்தது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் 3வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோபிநாத், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் திமுக வேட்பாளரைவிட ஒற்றை வாக்கை அதிகம் பெற்றிருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் 7ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது இப்ராஹிம்ஷா ஒரு வாக்குக் கூட பெறவில்லை. இங்கு திமுக 2ஆவது இடத்தைப் பிடித்த நிலையில், சுயேச்சை வேட்பாளரே வெற்றி பெற்றார்.
அதேபோல திருவாரூர் மாவட்டம், பேரளம் பேரூராட்சி 8ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் 3 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒரு வாக்கையும் பெற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி 19 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் சர்ஃப்ரஸ் நவாஸ் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் பேரூராட்சி, ஏழாவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நித்யா, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் கர்ணனைவிட ஒரு வாக்கு அதிகம் பெற்றிருந்தார்.