’பழைய ஓய்வூதியத் திட்டம் வர திமுகவுக்கு வாக்களியுங்கள்’- விமர்சிக்கப்படும் விழுப்புரம் வேட்பாளர் ரவிக்குமார்
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் பதிவிட்டதற்கு, விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன. ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியா முழுவதும் எப்போது?
இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19 நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவி வரும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி அமைத்துக் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி எப்போதும்போலத் தனித்துக் களம் காண்கிறது. வேட்பாளர்கள் அனல்பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக 2 தொகுதிகளில் களம் காண்கிறது. சிதம்பரம் தொகுதியில் விசிகவின் திருமாவளவன் போட்டியிடும் நிலையில், விழுப்புரம் தொகுதியில் சிட்டிங் எம்.பி.யான ரவிக்குமாரே மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே!
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த,
- ஒப்பந்தப் பணி நியமனங்களை ஒழித்து, நிரந்தர வேலை பெற,
- விடுப்பு நாட்களைப் பணமாகப் பெறும் முறையை ( leave encashment ) மீண்டும் கொண்டுவர திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
எத்தனை முறை ஏமாற்றுவீர்கள்?
எனினும் இதற்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர்கள் கூறியுள்ள பதிலில், ’’ஏற்கனவே 2021-ல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி தந்து, 1066 நாட்களாக அமல்படுத்தவில்லை. 5 மாநிலங்கள் அதை அமல்படுத்தி உள்ளன. ஆனால் திமுக ஆட்சி மட்டும் பயப்படுகிறது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் இது பற்றி வாயே திறக்கவில்லை. எத்தனை முறை ஏமாற்றுவீர்கள் மக்களை?’’ என்று கூறியுள்ளனர்.
அதேபோல இன்னொரு பயனர், ’’மூன்று வருடம் மாநில ஆட்சி, 5 வருடம் எம்.பி.யாக இருந்து ஒன்றும் செய்ய முடியவில்லை மீண்டும் வந்தாலும் எதுவும் செய்யப்போவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அப்போது எதிர்க் கட்சித் தலைவராக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.