Vikravandi by election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உட்பட 29 மனுக்கள் ஏற்கப்பட்டன.
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உட்பட 29 மனுக்கள் ஏற்கபட்டன. 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனு பரிசீலனை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு தாக்கலில் 55 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான திமுகவை சார்ந்த வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டன.
35 மனுக்கள் நிராகரிப்பு
மொத்தமாக பெறப்பட்ட வேட்பு மனு தாக்கலில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 26ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றை தினம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள் என தெரியவரும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீமதியின் தாயார் செல்வி வேட்புமனு நிராகரிப்பு
இவர்களில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 242வது முறையாகவும், அக்னி ஆழ்வார் 51வது முறையாகவும், நூர் முகமது 44 வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியும் இறுதி நாளான நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதில் ஸ்ரீமதியின் தாயார் செல்வியின் வேட்புமனு நிராகரிப்பு செய்யப்பட்டது.