கரூர்: ஒரே வார்டில் தேர்தலை சந்திக்கும் விசிக, திமுக வேட்பாளர்கள்... குழப்பத்தில் தொண்டர்கள்..!
திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டில் தற்போது திமுக வேட்பாளர் போட்டியிடுவதால் அங்கு மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் கொண்ட மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி பகுதியில் அதிமுக சார்பாக 46-வார்டு பகுதியிலும், பாரதிய ஜனதா கட்சி 43 வார்டுகளிலும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி 48 வார்டுகளிலும் போட்டியிடுகின்றனர். அதிமுகவும், திமுகவும் நேரடியாக 41 வார்டுகளில் மோதுகின்றனர். இந்நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று வார்டுகளும், கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு வார்டுகளும், சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு வார்டுகளும், மதிமுக கட்சிக்கு ஒரு வார்டுகளும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒரு வார்டுகளும், மொத்தம் 7 வார்டுகள் கூட்டணி கட்சி ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 41 வார்டுகளில் திமுக நேரடியாக களம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சிக்கு கரூர் மாநகராட்சி 11வது வார்டு பகுதியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒதுக்கினர். இந்த 11வது வார்டில் விடுதலை சிறுத்தை கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான ஜெயராமன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளில் கூட வேட்புமனு தாக்கல் காலதாமதமாகவே செய்தார். இந்நிலையில் அதே 11 வது வார்டில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வேட்பாளராக பழனி குமார் என்பவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு மாநகராட்சியில் ஒரு வார்டு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வார்டிலும் திமுக வேட்பாளர் ஒருவர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது திமுக கூட்டணி கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே வார்டு , ஒரே கூட்டணி, ஆனால் இரண்டு வேட்பாளர்கள் என புது குழப்பத்தை உண்டாக்கி உள்ளனர் திமுக கூட்டணி. திமுக 11 வார்டு பகுதிக்கு விருப்ப மனு அளித்து அங்கு திமுக கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்ககப்பட்ட பழனி குமார் அந்த பகுதியில் மிகவும் பழக்கமானவர். இந்நிலையில் அவர் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்து திமுக கட்சி அவருக்கும் சீட்டு வழங்கியுள்ளது. அதேபோல் தனது கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தை கட்சிக்கும் அதே ஒதுக்கியுள்ளது.
இதனால், கரூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே தேர்தல் நேரத்தில் சலசலப்பு ஏற்படும். இந்நிலையில் கரூர் மாநகராட்சி 11வது வார்டு பகுதியில் போட்டியிடும், விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரும், திமுக வேட்பாளரும் நேற்று மாலை வரை தங்கள் மனுவை வாபஸ் பெறாத நிலையில் நேற்று இரவு மாநகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இருவருடைய பெயரும் இடம்பெற்றுள்ளது.
கரூர் மாநகராட்சி 11வது வார்டு பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கும் உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டு அவரும் தேர்தலில் களத்தில் நிற்கிறார். இதனால் அப்பகுதியில் திமுக கூட்டணி நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க போகிறார்களா அல்லது விடுதலை சிறுத்தை கட்சி சின்னமான தென்னை மரம் சின்னத்தில் வாக்களிக்க போகிறார்களா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.