மேலும் அறிய
Advertisement
Vanathi Srinivasan Win: வானதி ஜெயித்தது எப்படி? கோவை தெற்கில் தாமரை மலர காரணமான 5 சுற்றுகள்!
கோவை தெற்கு தொகுதியில் கடைசி கட்ட பரபரப்புக்கு இடையே பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். கோவை தெற்கில் தாமரை மலர காரணமாக இருந்த முக்கிய சுற்றுகள் எவை? கடைசி நேரத்தில் களத்தில் இருந்த கமல் என்ன ரியாக்ஷன் அளித்தார் என்பதை தெளிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி, எதிர்பார்த்தபடியே மும்முனை போட்டி நிலவிய தொகுதி, கடைசி வரை கை நகம் கடிக்க வைத்த தொகுதி, ஓரிரு சுற்றில் முடிவை தீர்மானித்த தொகுதி இப்படி என்னவெல்லாம் பரபரப்பு இருக்கிறதோ அத்தனை பரபரப்பையும் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொண்ட தொகுதி தான் கோவை தெற்கு.
பாஜகவிற்கு சாதகமாக தான் இருக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் போட்டியிடும் அறிவிப்பு வரும் வரை நம்பப்பட்ட தொகுதி. ஆனால் கமல் அங்கு போட்டியிடுகிறார் என்றதும், 50/50 ஆக களம் மாறியது. பாஜகவின் வானதி-மக்கள் நீதி மய்யத்தின் கமல்-காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் என அனைவரும் முகம் தெரிந்தவர்கள். இருந்தாலும் கமலுக்கு கூடுதல் வெளிச்சம்.
பிரசாரம் துவங்கிய நாளிலிருந்தே கடுமையான விமர்சனம், தாக்கு, குற்றச்சாட்டு என அனல் பறந்த கோவை தெற்கு, முடிவு தெரியும் நாளிலும் அதிலிருந்து சிறிதும் குறைவில்லாமல் சூடாகவே இருந்தது.
முதலில் தபால் வாக்குகளை திறந்ததுமே காங்கிரஸ் வேட்பாளர் கை ஓங்கியது. அதன் பின் வாக்கு இயந்திரத்தை திறந்ததும், டார்ச் லைட் ஜொலித்தது. முதல் சுற்றில் வெளிச்சம் தந்த டார்ச் லைட், கையோடு தாமரையை மூன்றாவது இடத்திற்கு நகர்த்தியது. இரண்டாவது சுற்றில் காங்கிரஸ் கை, டார்ச் லைட்டை கீழே இழுக்க மீண்டும் தாமரை மூன்றாவது இடத்தில் தொடர்ந்தது. அதன் பின் டார்ச் வசமான கோவை தெற்கு, ஏழாவது சுற்று வரை மிளிர்ந்து கொண்டிருந்தது.
என்ன ஆனார் வானதி என அனைவரும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க, தனது இன்னிங்ஸை 8 வது சுற்றில் தான் துவக்கினார் வானதி. இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய அவர், கமலஹாசனை துரத்திக்கொண்டே இருந்தார். இப்படியே சென்று கொண்டிருந்த பந்தயம்,திடீரென தடம் மாறத் தொடங்கியது.
19 வது சுற்றில் வானதிக்கு திடீர் பின்னடைவு. மீண்டும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு மூன்றாவது இடத்திலிருந்த மயூரா இரண்டாவது இடத்திற்கு வந்தார். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 20 வது சுற்றில் மீண்டும் இரண்டாம் இடம் பிடித்த வானதி, கமலுடன் கத்திச்சண்டையிட்டார்.
ஒவ்வொரு சுற்றும் கமலுக்கு சாதகமாக இருக்க, நூற்றுக்கணக்கில் கூடிக்கொண்டிருந்த ஓட்டு 22வது சுற்றில் வானதி வசம் வந்தது. 176 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி திடீர் முன்னிலை பெற்றார். அதன் பின் எப்படியாவது கமலுக்கு சாதகம் மாறும் என மநீம மட்டுமல்ல, மக்களில் ஒரு தரப்பினரும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அனைத்தையும் அப்படியே மாற்றினா் வானதி.
கடைசி 5 சுற்றுகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், அனைத்திலும் வானதியின் தாமரை தண்ணீரை தாண்டி மலர்ந்து கொண்டிருந்தது. இப்படி தான் 1726 வாக்குகள் வித்தியாசத்தில் கோவை தெற்கில் தாமரை மலர தயாரானது; இறுதியில் மலர்ந்தது. கடைசி வரை களத்தில் இருந்த கமலும், வானதியும் அருகருகே அமர்ந்து பொறுமையாக முடிவுகளை கவனித்தனர். இறுதிச்சுற்று முடிந்ததும் வானதிக்கு வாழ்த்து தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டார் கமல். மற்ற தொகுதிகள் எல்லாம் ஒரு சிலசுற்றுகள் இருக்கும் போதே முடிவுகளை அறியும் நிலையில் இருந்தன. ஆனால் கோவை தெற்கு மட்டுமே கடைசி ஓட்டு வரை எண்ணி முடிவை அறியும் தருவாயில் இருந்தது. அதற்க காரணம், அது நட்சத்திரங்களின் தொகுதி. அதனால் தான் அங்கு ஜொலிக்கப்போகும் நட்சத்திரம் யார் என்பதை அறிய இரவானது.
53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்ற வானதிக்கு முதலிடம், 51 ஆயிரத்து 481 வாக்குகள் பெற்ற கமல் இரண்டாவது இடம். 41 ஆயிரத்து 801 வாக்குகள் பெற்ற மயூரா ஜெயக்குமாருக்கு மூன்றாவது இடம். ஆனாலும் முதன்முறையாக கோவை தெற்கில் தாமரை மலர்கிறது. தமிழகத்தில் இரண்டாவது முறை மலர்கிறது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion