PM Modi Exclusive Interview: "மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு இழுக்கு ” பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி
PM Modi Exclusive Interview: எதிர்க்கட்சி தலைவர்களுடன் நல்ல உறவு உள்ளது. சோனியா காந்தியின் உடல்நலம் குறித்தான கவலை எழுந்த போது ஆறுதல் தெரிவித்தேன் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 7 கட்ட வாக்குப்பதிவில் இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மேலும், வரும் ஜூன் 1 ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி:
இந்நிலையில், கடைசி வாக்குப் பதிவுக்கு 4 நாட்களும், வாக்கு எண்ணிக்கைக்கு 7 நாட்களே உள்ள நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடி, ABP குழுமத்தின் ஓர் அங்கமான பெங்கால் மொழித் தொலைக்காட்சிக்கு பிரிவான ABP அனந்தாவுக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.
இப்பேட்டியில் மூன்றாவது முறையாக அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், தனது நிர்வாக பாணி குறித்தும் , எதிர்க்கட்சிகள் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். மேலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதியில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள் குறித்தும், ”மேற்கு வங்கத்தில், வைக்கப்படும் குற்றச்சாட்டு ஊழலில் ரூ. 3,000 கோடியை" திரும்பக் கொண்டு வருவேன் என்ற வாக்குறுதி குறித்தும் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
இந்நிலையில் எந்த கேள்விக்கு என்ன பதிலளித்தார் என்பது குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
எதிர்க்கட்சி தலைவர்களில் உங்களுக்கு யாரை பிடிக்கும்?
பிரதமர் மோடி பதில் தெரிவித்ததாவது, எதிர்க்கட்சி தலைவர்களுடன் நல்ல உறவு உள்ளது. சோனியா காந்தியின் உடல்நலம் குறித்தான கவலை எழுந்த போது ஆறுதல் தெரிவித்தேன். மேலும் 2019 தேர்தலின் போது, முன்னாள் காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜியை பலமுறை அணுகியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிடுகிறார்.
ஓபிசி சான்றிதழ்களை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கேள்வி:
பிரதமர் மோடி பதிலளித்துள்ளதாவது, மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு இழுக்காகும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தீர்ப்பை எதிர்ப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல்.
இருப்பினும், நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. மேலும், "அரசியல் நிர்ணய சபையில் இடஒதுக்கீடு குறித்த விவாதம் நடந்தபோது - மத அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய முடியாது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். மத அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது. நாங்கள் அளித்த இட ஒதுக்கீடு மத அடிப்படையில் இல்லை. அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்".
இப்போது மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது. இது வாக்கு அரசியல். மேற்கு வங்கத்தின் சுமார் 77 சமூகங்கள் ஓபிசி ஆக்கப்பட்டன. இதெல்லாம் வாக்குகளுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என பிரதமர் கூறினார்.
ஊழல் தொடர்பான குறித்தான கேள்விக்கு:
பிரதமர் மோடி பதிலளித்ததாவது, இந்தியாவை உலகின் '3வது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கான திட்டத்தை தயார் செய்துள்ளோம். 2014 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையிலான காலத்தில் சுமார் ரூ. 2,200 கோடி ரூபாயை அமலாக்கத்துறை கைப்பற்றியிருக்கிறது. பெரிய புள்ளிகள் சிறையில் உள்ளனர் என பிரதமர் மோடி ஏபிபி அனந்தாவுக்கு அளித்த நேர்காணலில் பதிலளித்தார்.