CM Stalin: மோடியின் நிஜக் குடும்பம் ஈ.டி., சிபிஐ, ஐடி துறைகள்தான்: முதல்வர் ஸ்டாலின் சாடல்!
பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க் கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தனியார் நாளேடு தோலுரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். பாஜகவுக்குத் தாவிய 23 எதிர்க்கட்சித் தலைவர்களின் ஊழல் வழக்குகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தனியார் நாளேடு தோலுரித்துள்ளது. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க் கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.
உயர் விசாரணை அமைப்புகளை இழிவாக்கிய பாஜக
10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?
“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது! மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு!
— M.K.Stalin (@mkstalin) April 3, 2024
பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே… pic.twitter.com/zpqOag2tHB
தொடர் குற்றச்சாட்டுகள்
இந்தியாவில் ஆளும் பாஜக அரசு, எதிர்க் கட்சிகளின் மீது தொடர்ச்சியாக ரெய்டுகளை ஏவி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தன் கட்சி நிர்வாகிகள் மீதோ, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மேலே எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்காத பாஜக அரசு, எதிர்க் கட்சி நிர்வாகிகளை அப்படி விடுவதில்லை என்று கூறப்படுகின்றது.
எதிர்க் கட்சிகளின் முதலமைச்சர்கள் கைது
அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராகவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவராகவும் இருந்த ஹேமந்த் சோரன் ஈ.டி. எனப்படும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அதேபோல, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும், குற்றங்கள் எதுவும் நிரூபணம் செய்யப்படாத நிலையில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.