PM Modi: மதம் சார்ந்த பரப்புரையா? ”இந்து - முஸ்லீம்னு நான் சொல்லவே இல்லையே” - அந்தர் பல்டி அடித்த பிரதமர் மோடி
PM Modi: மதம் சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்வதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.
PM Modi: இந்து - முஸ்லீம் என பிரித்து பார்த்தால் நான் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதில் அர்த்தமே இல்லை என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மதம் சார்ந்த பரப்புரை - பிரதமர் மோடி விளக்கம்:
ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடந்த பேரணியின் போது, நாட்டின் வளங்கள் மீது சிறுபான்மை சமூகத்தினர் உரிமை கோருவது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக மோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. "ஊடுருவுபவர்கள்" மற்றும் "அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள்" போன்ற வார்த்தைகள் மூலம், இஸ்லாமியர்களை தான் பிரதமர் மோடி குறிப்பிடுவதாக கண்டனங்கள் குவிந்தன. மதம் சார்ந்து பரப்புரை மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் மதம் சார்ந்து எந்த பரப்புரையையும் மேற்கொள்ளவில்லை என பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.
”இந்து - முஸ்லீம் என நான் பேசவே இல்லை”
அதன்படி, ”அதிக குழந்தைகளைப் பெறுபவர்கள் என கூறியது இஸ்லாமிய சமூகத்தை குறிப்பிடுகிறது என்று யார் சொன்னது? இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏன் பாகுபாடு காட்டுகிறார்கள்? எங்கள் ஏழைக் குடும்பங்களில் கூட இதே நிலைதான் உள்ளது. அவர்களால் கல்வி கற்க முடியவில்லை. எந்த சமூகத்தில் ஏழ்மை இருக்கிறதோ அங்கெல்லாம் குழந்தைகள் அதிகம் இருக்கின்றனர். நான் இந்துக்கள் என்றோ அல்லது இஸ்லாமியர்கள் என்றோ குறிப்பிடவில்லை. உங்களால் எவ்வளவு குழந்தைகளை வளர்க்க முடியும் என்று நான் கூறினேன். அரசே அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற சூழலை உருவாக்க வேண்டாம் என்றே கூறினேன்” என மோடி விளக்கமளித்துள்ளார்.
அர்த்தமே இல்லை - பிரதமர் மோடி:
இஸ்லாமியர்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எனது நாட்டு மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நான் இந்து-முஸ்லிம் என்று பிரிவினை செய்தால், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியானவனாக இருக்க மாட்டேன். நான் இந்து-முஸ்லிம் என்ற பிரிவினையை மேற்கொள்ள மாட்டேன். வீடு கொடுப்பதைப் பற்றி பேசினால், நான் சமத்துவத்தைப் பற்றி பேசுகிறேன். 100% வழங்குதல் என்றால் 200 வீடுகள் உள்ள கிராமங்களில், அவர்கள் எந்த சமூகம், மதம், சாதி என்பது முக்கியமில்லை. அந்த வீடுகளில் 60 லட்சம் பேர் வசிக்கிறார்கள் என்றால் அந்த 60 லட்சம் மக்களுக்கும் தேவையானதை வழங்குவதே உண்மையான சமூக நீதி ஆகும்” என பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்:
ராஜஸ்தானில் கடந்த மாதம் 21ம் தேதி பேசிய பிரதமர், “காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் இந்த சொத்து யாருக்கு பங்கிடப்படும்? அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். நீங்கள் கடின உழைத்து ஈட்டிய பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா?” என பேசினார். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. அதனடிப்படையில், மதம் சார்ந்த பரப்புரைகளை மேற்கொண்டதாக, பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் தான், மதம் சார்ந்த பரப்புரைகளை தான் மேற்கொள்ளவில்லை என பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.