Pawan Kalyan: பவர் ஸ்டார் பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டி - ஆந்திர அரசியலில் கலக்குவாரா?
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் ஆந்திர சட்டசபைத் தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்காக தயாராகி வருகின்றனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் பெரும்பாலான மாநிலங்களில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீட்டை முக்கிய அரசியல் கட்சிகள் உறுதி செய்து வருகின்றனர். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றாலும், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து சட்டசபைத் தேர்தலும் இணைந்து நடக்கிறது.
தெலுங்கு தேசம், பா.ஜ.க.வுடன் கைகோர்த்த பவன் கல்யாண்:
ஆந்திராவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர், ஜனசேனா கட்சியின் தலைவரான நடிகர் பவன் கல்யாண். இவர் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திர சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. – தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்களுடனான கூட்டணி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.
ஆந்திராவில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகளும், 175 சட்டசபைத் தொகுதிகளும் உள்ளது. பா.ஜ.க. 6 மக்களவைத் தொகுதிகளிலும், 10 சட்டசபைத் தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சி 17 மக்களவைத் தொகுதிகளிலும், 144 சட்டசபைத் தொகுதிகளிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 மக்களவைத் தொகுதிகளிலும், 21 சட்டசபைத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பிதாபுரத்தில் போட்டி:
இந்த நிலையில், ஜனசேனா கட்சித் தலைவரான பவன் கல்யாண் பிதாபுரம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவதாக இன்று அறிவித்தார். பவன் கல்யாண் கடந்த சட்டசபைத் தொகுதியில் கஜூவாகா மற்றும் பீமாவரம் தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் அவர் தோல்வியடைந்தார்.
தெலுங்கு திரையுலகத்தின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் கடந்த 2008ம் ஆண்டு அரசியல் களத்தில் புகுந்தார். சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்தார். சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்த பிறகு, கடந்த 2014ம் ஆண்டு பவன் கல்யாண் ஜனசேனா கட்சியைத் தொடங்கினார். ஆனால், அந்தாண்டு நடந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனசேனா கட்சி போட்டியிட்டது.
அந்த தேர்தலில் பெரிதும் ஜனசேனா கட்சி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த இயலவில்லை. இந்த முறை தெலுங்கு தேசம் – பா.ஜ.க.வுடன் பவன் கல்யாண் கூட்டணி அமைத்துள்ளதால், ஆந்திர தேர்தலில் ஜனசேனா கட்சி ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தெலுங்கு ரசிகர்களால் பவர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் பவன் கல்யாணுக்கு ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.க்ஷ
பிதாபுரம் தொகுதி எப்படி?
பிதாபுரம் தொகுதி காக்கிநாடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த தொகுதி தற்போது ஒய்.எஸ்.ஆர். கட்சி கைவசம் உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கடைசியாக 1989ம் ஆண்டும், தெலுங்கு தேசம், 1994ம் ஆண்டும், பா.ஜ.க. 2004ம் ஆண்டு வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பிதாபுரம் தொகுதியில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி 2009ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்றது. இதனால், வரும் சட்டசபைத் தொகுதியில் பவன் கல்யாண் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் மாற்றங்கள் என்ன? பரிந்துரைப் பட்டியல் இதோ!
மேலும் படிக்க: தேர்தலில் இதுதான் எங்கள் டார்கெட்! குறிச்சி வச்சிக்கோங்க; ஓடிவிட மாட்டேன்: சவால் விடும் அண்ணாமலை