நாளை முடியும் வேட்புமனுத் தாக்கல்; இன்றாவது வெளியாகுமா மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் பெயர்?
வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப்ரல் 27ஆம் தேதியான நாளையோடு முடிகிறது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை முடியும் நிலையில், மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இன்றாவது வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனுத் தாக்கல் நாளை (மார்ச் 27) முடிவடைய உள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பெரும்பாலான வேட்பாளர்கள் நேற்றே (மார்ச் 25) வேட்புமனுத் தாக்கலை முடித்து விட்டனர். பிரச்சாரமும் சூடுபிடிக்க நடைபெற்று வருகிறது.
வேட்பாளர்களுக்கு தீவிரப் பரப்புரை
முதல்வர் ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு தீவிரமாகப் பரப்புரை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுக கூட்டணியின் கீழ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எல்லா கட்சிகளும் பெரும்பாலும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், தாமதமாகவே தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். இதில் 7 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.
தொடர்ந்து மயிலாடுதுறை, திருநெல்வேலி வேட்பாளர்களின் பட்டியல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையே நேற்று (மார்ச் 25) திருநெல்வேலி வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார். இவர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
எனினும் இதுவரை மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இன்று மாலைக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயரின் மகள் சுரண்யா ஐயர் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
எப்போது மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிக்கப்படுவார்?
வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப்ரல் 27ஆம் தேதியான நாளையோடு முடிகிறது. 40 தொகுதிகளில் 4 முனையில் போட்டியிடும் வேட்பாளர்கள் 159 பேரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் எப்போது மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கேள்வி எழுந்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: DMK vs AIADMK vs BJP vs NTK: மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் 4 முனைகளில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் யார் யார்? இதோ முழு பட்டியல்!