Local Body Election | நெல்லை மாநகராட்சி தேர்தல் - மக்கள் எதிர்ப்பார்ப்பும்; கிடப்பில் உள்ள திட்டங்களும் ஓர் பார்வை
”நெல்லை மாநகராட்சியில் இதுவரை 3 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் ஆட்சி புரிந்து உள்ளது”
![Local Body Election | நெல்லை மாநகராட்சி தேர்தல் - மக்கள் எதிர்ப்பார்ப்பும்; கிடப்பில் உள்ள திட்டங்களும் ஓர் பார்வை Nellai Corporation Mayor Election - A Look at People's Expectations and Dormant Plans Local Body Election | நெல்லை மாநகராட்சி தேர்தல் - மக்கள் எதிர்ப்பார்ப்பும்; கிடப்பில் உள்ள திட்டங்களும் ஓர் பார்வை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/919d26475594f19d96b3be2a93994cd0_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாநகராட்சி குறித்த ஓர் பார்வை
தமிழகத்தில் 6 வது மாநகராட்சியாக கடந்த 1994 இல் உருவானது நெல்லை மாநகராட்சி. குறிப்பாக நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மொத்தமாக 55 வார்டுகளை கொண்டது, 55 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் - 2,03,879 பெண் வாக்காளர்கள் – 2,12,473 இதர வாக்காளர்கள் 37 பேர் என மொத்தம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 389 வாக்காளர்கள் தற்போது உள்ளனர், அதே போல மாநகராட்சியில் 160 பகுதிகளில் 490 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது,
நெல்லை மாநகராட்சி இதுவரை 4 பொதுத்தேர்தலையும், 1 இடைத்தேர்தலையும் சந்தித்து உள்ளது, இதில் நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கடந்த 1996 இல் அதிமுக சார்பில் போட்டியிட்ட வசந்தி முருகேசனை எதிர்த்து திமுக சார்பில் உமாமகேஸ்வரி வெற்றி பெற்றார்,
தொடர்ந்து 2001 இல் திமுக சார்பில் போட்டியிட்ட உமாமஸ்வரியை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ஜெயராணி என்பவர் வெற்றி பெற்றார், அதன் பின்னர் மாநகராட்சியில் மறைமுக மேயர் தேர்தல் நடைமுறைக்கு வந்தது,
2006 இல் மாநகராட்சி மறைமுக தேர்தலில் திமுக சார்பில் ஏ.எல் சுப்பிரமணியன் வெற்றி பெற்று மேயரானார்,
2011 இல் திமுக சார்பில் போட்டியிட்ட அமுதாவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த விஜிலா சத்யானந்த் வெற்றி பெற்று மேயரானார், ஆனால் 2014 இல் விஜிலா சத்யானந்த் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெற்றது,
இதில் அதிமுக சார்பில் புவனேஸ்வரியும், பாஜக சார்பில் வெள்ளையம்மாளும் போட்டியிட்டனர், இந்த நிலையில் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது, அதே நேரம் பாஜக வேட்பாளரும் வாபஸ் வாங்கியதால் அதிமுக மேயராக புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்,
அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத சூழலில் 8 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களமானது சூடுபிடிக்க துவங்கி உள்ளது,
ஒட்டுமொத்தமாக நெல்லை மாநகராட்சியில் இதுவரை 3 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் ஆட்சி புரிந்து உள்ளது, தற்போதைய தேர்தல் கள சூழ்நிலையை பொறுத்தவரை நெல்லை தொகுதியில் பாஜக ஆட்சி செய்து வருகிறது, பாளையங்கோட்டை திமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது, பல ஆண்டுகளுக்கு பின் வரும் பிப் 19 இல் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நெல்லையை பொறுத்தவரை பலமுனை போட்டி நடைபெற்று வருகிறது, திமுக, அதிமுகவிற்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு மற்ற கட்சியினரும், சுயேச்சையாகவும் வேட்பாளர்கள் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளனர். எனவே இந்த தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையுமா அல்லது மற்ற கட்சியினருக்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,
கிடப்பில் உள்ள திட்டங்கள்:
மாநகராட்சியை பொறுத்தவரை மாநகர் பகுதி முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக சிதலமடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர்,
குறிப்பாக 2006 இல் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டச்சாலை கிடப்பில் உள்ளது, 2012 இல் 19 கோடி மதிப்பில் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டு 68 கோடி மதிப்பில் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிடப்பில் போடப்பட்டு உள்ளது, இணைப்பு சாலை வசதிகள் சாலையை அகலப்படுத்துதல் என எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை,
அதேபோல தியாகராஜ நகர், குலவணிகர்புரம் ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கிடப்பில் உள்ளது, குறிப்பாக தியாகராஜ நகரில் ரயில்வே மேம்பால பணிகள் 75% நிறைவடைந்த நிலையில் பாலத்தை ரயில் தடத்திற்கு மேல் இணைக்கப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது,
பாதாளச்சாக்கடை திட்டம் முழுமை பெறவில்லை, மாநகரின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நெல்லை மாநகர் பொலிவுறும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தாலும் அதனால் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க முடியாமல் மக்கள் பல ஆண்டுகளாக திண்டாடி வருகின்றனர்,
மாநகர மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகள்:
தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று சொல்லக்கூடிய பாளையங்கோட்டையில் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் செயல்படுகின்றது, ஆனால் இங்கு வந்து செல்லு மாணவர்கள் மட்டுமின்றி தொழில் ரீதியாக செல்லும் மக்களும் குலவணிகர்புரம் ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும், ஆயிரக்கணக்கான ரயில்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல பல மணி நேரம் ஆவதால் நிரந்தர தீர்வை எதிர்பார்த்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்,
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கை,
அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், இதனால் மாநகரில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்பது மக்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு
அதேபோல பாதாளச்சாக்கடை திட்டம், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புதிய சாலை திட்டம், கழிப்பறை வசதி, என மக்களின் சிறு சிறு அடிப்படை தேவைகளை வரும் மனதில் கொண்டு அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் நெல்லை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளாக உள்ளது,
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)