Fact Check: காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
MS Dhoni - Congress:காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு தோனி கூறியதாக சமூக வலைதளங்களில் புகைப்படமானது வைரலாகி வருகிறது.
தோனி புகைப்படம் வைரல்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தல என்றும் ரசிகரால் அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியின் புகைப்படமானது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அந்த புகைப்படத்தில், தோனி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) ஜெர்சியை அணிந்து, அவரது இடது உள்ளங்கையை காட்டியும், வலது ஆள்காட்டி விரலால் 'ஒன்று' என்றும் சைகை செய்வது போன்று புகைப்படம் உள்ளது.
இந்நிலையில், அந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், தோனி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறியதாக, பலர் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அதில்,சில பதிவுகளில் தெரிவிக்கப்பட்டதாவது,
கமல் ஆர் கான் என்னும் பதிவர் தெரிவிக்கையில், "காங்கிரசுக்கு கட்சிக்குதான் வாக்களித்ததாக தோனி தெளிவாகக் கூறுகிறார். என்று பதிவிட்டு புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார்..
மற்றொரு பயனர் தெரிவிக்கையில், "வாக்களித்த பிறகு தோனி ஏன் தனது கையைக் காட்டுகிறார்?" என இந்தி மொழியில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
காங்கிரசுக்கு வாக்கு கேட்டாரா தோனி?
இந்நிலையில், இந்த புகைப்படம் குறித்து ஏபிபி நாடு செய்தி தளம் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தது. ஆய்வு செய்ததில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தோனி சைகை செய்யவில்லை என்பதை உறுதி செய்தோம்.
எதனடிப்படையில் என்றால், இந்த புகைப்படமானது, 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். இது சிஎஸ்கே வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ( தற்போது X தளம் ) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான பதிவை இங்கு இணைத்துள்ளோம்.
Nandri filled Thala Dharisanam as our Twitter fam becomes 6 Million Strong! #SixerOnTwitter #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/GJc6vBYf39
— Chennai Super Kings (@ChennaiIPL) October 5, 2020
அதில் சிஎஸ்கே பக்கத்தில் 6 மில்லியன் பின் தொடர்பவர்களை அடைந்ததை கொண்டாடும் வகையில், ஒரு கையில் 5 விரல்கள் மூலமும் மற்றொரு கையில் ஒரு விரல் மூலமும் என 6 என்று சைகை காண்பித்துள்ளார். இதை, தற்போது வேறு விதமாக சிலர் பரப்பி வருகின்றனர்.
மேலும், மற்றொரு வீடியோவையும் சிஎஸ்கே அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதிலும், தோனி 6 என காண்பிக்கப்படுவது காட்சியாக உள்ளது.
Chennai Super #SixerOnTwitter! A big thanks to all the super fans for each and every bouquet and brickbat throughout the last decade. All the #yellove to you. #WhistlePodu 🦁💛 pic.twitter.com/9KgCtf3G9I
— Chennai Super Kings (@ChennaiIPL) October 5, 2020
பொதுமக்கள் கவனம் தேவை:
தேர்தல் காலம் என்பதால், பலர் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப சிலவற்றை திருத்தம் செய்து பதிவிடுவதை, சமூக வலைதளங்களில் காண முடிகிறது. சமூக வலைதளங்களில் எந்த பதிவையும் பகிர்வதற்கு முன்னர், உண்மையா என அறிந்து பகிரவும். மேலும், வாக்களிக்கும் போது, உங்கள் மனசாட்சி தன்மைக்கு உட்பட்டு வாக்களிக்க வேண்டும். யார் நல்லவர்கள், யார் மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர, பிரபலம் சொல்வதால் கண்மூடித்தனமாக முடிவு எடுக்க கூடாது. உங்கள் வாக்கு உங்கள் உரிமை.