Maithili Thakur: கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் சீட்.. ஒரே மாதத்தில் MLA.. பீகார் அரசியலை புரட்டிப்போட்ட மைதிலி தாகூர்!
பீகார் மாநிலத்தில் அலிநகர் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினரான பினோத் மிஸ்ராவை விட 11,730 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியல் உலகில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் குறிப்பிட்ட ஒரு போட்டியாளரின் வெற்றி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் தான் அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட மைதிலி தாகூர்.
25 வயதான இந்த இளம்பெண் தான் பீகார் மாநிலத்தில் இளம் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அங்குள்ள அலிநகர் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினரான பினோத் மிஸ்ராவை விட 11,730 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள பெனிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் மைதிலி தாகூர். நாட்டுப்புற பாடகியாக அறியப்படும் அவர், கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி தனது 25வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது அடுத்த 3 மாதங்களில் வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவேன் என அறிவித்தார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. காரணம் அப்போது அவர் பாஜகவில் இணையவில்லை.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி பிஹார் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அலிநகர் தொகுதியில் பாடகி மைதிலி தாகூருக்கு சீட் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருநாள் முன்னர் தான் அவர் தன்னை பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். மைதிலி தாகூர் பீகார் தேர்தலில் நட்சத்திர முகமாக இருப்பார் என பாஜக கணித்திருந்தது. கட்சியில் சேர்ந்த ஒருநாளில் அவருக்கு எம்.எல்.ஏ. சீட் வழங்கப்பட்டது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது.
முன்னதாக மைதிலி அளித்த பேட்டி ஒன்றில், நாட்டுப்புற பாடகியான தான் பல பாஜகவின் கலாச்சார நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் பாடியிருக்கிறேன். அதனால் அந்த கட்சியின் தலைவர்களை எனக்கு நன்றாக தெரியும். அதனால் அலிநகர் தொகுதியில் போட்டியிட சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை என தெரிவித்திருந்தார். நிச்சயம் நான் எம்.எல்.ஏ. ஆனதும் பெண் குழந்தைகள் கல்விக்காகவும், இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காகவும் ஏதாவது செய்வேன் என உறுதியளித்திருந்தார்.
2000 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி மதுபானி மாவட்டத்தில் பிறந்த மைதிலி தாகூர் பாரம்பரிய இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது 4 வயதில் தாத்தா மற்றும் தந்தையிடம் இருந்து நாட்டுப்புற மற்றும் இந்துஸ்தானி இசையைக் கற்க தொடங்கினார். 6 வயதில் மகளின் திறமையை அறிந்த மைதிலியின் தந்தை ரமேஷ் தாகூர் பீகாரில் இருந்து டெல்லியில் துவாரகாவிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 10 வயது முதல் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் இசை விழாக்களில் மைதிலி பாட தொடங்கினார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஏஆர்.எஸ்.டி கல்லூரியில் இசை பயிற்சி முடித்தார். தொடர்ந்து தனது சகோதரர்களுடன் இணைந்து போஜ்புரி மொழியில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பின்னர் ஜி டிவி, சோனி டிவியில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியில் தோன்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மைதிலி தாகூர் பீகாரின் இசை பாரம்பரியத்தை பாதுகாப்பவர் என கூறப்படுகிறார். 2019ம் ஆண்டு அவரும், அவருடைய சகோதரர்களும் தேர்தல் ஆணையத்தால் மதுபானியின் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமிக்கப்பட்டனர் என தன் வாழ்க்கையில் இளம் வயதிலேயே மைதிலி தாகூர் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.





















