CM Stalin: “மோடி தமிழ்நாட்டிற்கு வருவது திமுகவிற்குதான் ப்ளஸ் பாய்ண்ட்” - நேர்காணலில் முதல்வர் ஸ்டாலினின் சுவாரஸ்ய பதில்கள்!
இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமையாக செயல்பட்டு வருகிறார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய அளவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் பாஜக அரசை பின்னுக்கு தள்ளி ஆட்சியை கைப்பற்ற பல யுக்திகளை கையாண்டு வருகிறது இந்தியா கூட்டணி.
இந்த இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமையாக செயல்பட்டு வருகிறார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. மீதமுள்ள 19 தொகுதிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு பங்கு போட்டு கொடுத்துள்ளது திமுக.
அதன்படி காங்கிரஸ் 10 தொகுதியிலும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா 2 தொகுதியிலும் மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு தேசிய கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டிடுகின்றன.
கடந்த முறை 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை பிடித்து திமுக பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்த முறை 40க்கு 40 என அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தனது கட்சியை வலுப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் பல செய்தி நிறுவனங்களுக்கும் சிறப்பு பேட்டிகளை அளித்து வருகிறார் ஸ்டாலின். அதில் இருந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்களும் சில:
கேள்வி: கடந்த முறை தமிழ்நாடு – புதுவையில் ஒரு தொகுதி நீங்கலாக அனைத்திலும் வெற்றி பெற்றீர்கள். இந்த முறையும் நம்பிக்கையாக இருக்கிறீர்களா?
பதில்: இம்முறை 40க்கு 40இல் உறுதியாக வெல்வோம்.
கேள்வி: இந்தத் தேர்தலின் முதன்மையான விவகாரம் எது?
பதில்: ஆட்சிக்கு வருவதற்கு முன் என்னென்ன உறுதிமொழிகள் சொன்னோமோ… வாக்குறுதி கொடுத்தோமோ… அதை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். அது இல்லாமல், பல உறுதிமொழிகளை மக்களுக்கு செய்திருக்கிறோம். பெண்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். அதனால் நிச்சயமாக திமுக முழுமையாக வெற்றி அடையும்.
கேள்வி: பாஜகவின் வளர்ச்சியைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லையா? மோடி எனும் காரணி தமிழ்நாட்டில் வேலை செய்யாதா?
பதில்: மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ… அவ்வளவிற்கு அவ்வளவு தி.மு.க.விற்கு பிளஸ். ஏன் என்றால், வந்து வடை சுட்டுவிட்டு போகிறார்… பொய் சொல்லிவிட்டு போகிறார். அதனால் எங்களுக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்.
கேள்வி: உங்களின் முதன்மையான எதிரி அஇஅதிமுக-வா அல்லது பாஜக-வா?
பதில்: அஇஅதிமுக-தான் எங்களின் பிரதான எதிர்க்கட்சி. பாஜக சும்மா டிராமா செய்து கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது யார் வருவது என்று அவர்களுக்குள் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
கேள்வி: திமுகவில் குடும்ப அரசியல், ஊழல் நிலவுவதாக அவர்கள் உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறீர்கள். இதற்கு உங்கள் பதில்?
பதில்: அது என்ன என்று மக்களுக்கு தெரியும். சி.ஏ.ஜி. என்ன அறிக்கை கொடுத்தது என்று மக்களுக்குத் தெரியும். இப்போது தேர்தல் பத்திரம், அதில் எவ்வளவு கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று தெரியும். யாரையெல்லாம் மிரட்டி வாங்கி இருக்கிறார்கள் என்று தெரியும். மக்கள் இங்கு விழிப்புடன் இருக்கிறார்கள். நாங்கள் பரப்புரை செய்துதான் மக்களை மாற்ற வேண்டும் என்று அவசியமில்லை.
கேள்வி: மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளீர்களா? இந்த நீதித்துறை பாதை நீண்ட காலத்திற்கு சாத்தியமான ஒன்றாக நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: பேரிடர் நேரத்தில் நிதி வழங்காததை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குத் தமிழ்நாடு அரசு சென்றுள்ளது. எதையும் சட்டரீதியாகத்தான் கோருகிறது மாநில அரசு. அதனை ஒன்றிய அரசு மதிக்காத போது, கடைசி நம்பிக்கை நீதிமன்றம்தானே! அதனால்தான், உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக்கிறோம்.
நிர்வாக ரீதியான சிக்கலை பேசித் தீர்க்க இப்போது ஏதாவது வேறு வாய்ப்புகள் உள்ளனவா? கடந்த பத்தாண்டுகளில் மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை ஒருமுறையாவது மோடி அரசு கூட்டியுள்ளதா? கூட்டுறவுக் கூட்டாட்சி - துடிப்பான ஜனநாயகம் பற்றியெல்லாம் அதிகம் பேசுகிறார்கள்; ஆனால், நடைமுறையில் அதனைப் பின்பற்றவில்லை. கூட்டாட்சியே இல்லை; இதில் எங்கிருந்து கூட்டுறவுக் கூட்டாட்சி.
நாங்கள் மகிழ்ச்சியோடு நீதிமன்றத்தை நாடவில்லலை. ஒன்றிய அரசு எங்களை வஞ்சித்து பாரபட்சமாக நடத்தி நீதிமன்றம் செல்ல நிர்பந்திக்கிறது.
கேள்வி: சினிமா, கிரிக்கெட், ஜாகிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற உங்கள் தனிப்பட்ட ஆர்வங்கள் உங்கள் வாழ்க்கை முறையை எவ்வாறு வடிவமைத்துள்ளன?
பதில்: சினிமா என்பது கலைஞரில் தொடங்கி எங்கள் குடும்பத்தில் பலரும் ஈடுபட்ட - ஈடுபட்டு வருகிற துறைதான். ஒரே இரத்தம், மக்கள் ஆணையிட்டால் போன்ற திரைப்படங்களில் பொதுநலன் சார்ந்த இளைஞனாக நடித்திருக்கிறேன். நாடகம், டி.வி. சீரியல் ஆகியவற்றிலும் அப்போது நடித்துள்ளேன். கிரிக்கெட் எனக்குப் பிடித்த விளையாட்டு. சிறுவனாக, இளைஞனாக மட்டுமல்ல, சென்னையின் மேயராக இருந்தபோதுகூட கார்கில் நிதிக்காக நடந்த காட்சிப் போட்டியில் கபில்தேவ், ஸ்ரீகாந்த் போன்ற புகழ்பெற்ற வீரர்களுடன் விளையாடியுள்ளேன். உடற்பயிற்சியில் நான் எப்போதும் கவனம் செலுத்துவது உண்டு. சைக்கிளிங், ஜாகிங் எல்லாம் உடல்நலனைப் பாதுகாக்கின்ற பயிற்சிகள்தான். நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருடன் திரைப்படங்கள் பார்ப்பது உண்டு. பழைய பாடல்களை பாடுவதும் பிடிக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உங்களைப் போன்ற உணர்வுள்ள மனிதன்தான்.