Local Body Election | உள்ளாட்சி அமைப்புகள் சரியாக செயல்படவில்லை - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு
ராஜீவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின் நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. பஞ்சாயத்து நகர மன்றங்கள் அடிதடி சண்டை மற்றும் கைகலப்பு மன்றமாக மாறி உள்ளது
தமிழகம் முழுவதும் தற்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது, திண்டிவனம் நகராட்சியில் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவில் வார்டு எண் 19 போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் சரஸ்வதி ராமதாஸ் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறும்போது, மறைந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி எட்டு, எண்பத்தி ஒன்பதாம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை, பின்னர் நரசிம்மராவ் ஆட்சியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் இரண்டு அமைப்புகள் உள்ளது, 11வது அட்டவணை அரசியல் அமைப்பாகவும், 12வது அட்டவணை நகர்பாலிகா வாகவும் உள்ளது, இந்த இரு சட்டங்களும் உள்ளாட்சியில் மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன்படி கிராமம் நகரம், பேரூர் மற்றும் மாநகரம் ஆகியவற்றில் வாழும் மக்கள் அவர்களே தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அதன் மூலம் மக்களை ஆட்சி செய்வது, ஆனால் ராஜீவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின் நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. பஞ்சாயத்து நகர மன்றங்கள் அடிதடி சண்டை மற்றும் கைகலப்பு மன்றமாக மாறி உள்ளது. ஆரோக்கியமான விவாதங்கள் எதுவும் இல்லை, இந்த சட்டத்தில் 18 அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளது .
அதன்படி சாலை, குடிநீர் வசதி நகர மேம்பாடு உட்பட எதுவும் இதுவரை இயங்கவில்லை, இதற்கு காரணம் ஆண்ட அரசுகள் தான், இந்த அரசுகள் தான் இந்த சட்டங்களை செயல்படாமல் தடுத்து வருகிறது. உள்ளாட்சிக்கு உரிய நிதியும் வழங்கப்படுவதில்லை, ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உள்ள கொள்கைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம், நிதி அதிகாரம் கொடுப்பது உள்ள ஆட்சியை பரிசுத்தமாக வைத்துக் கொள்வது என்பது நம்முடைய குறிக்கோள் ஆகும். இந்த தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றியை பெறும், பாமகவின் மாங்கனி சின்னத்திற்கு வாக்களித்து வரும் வாக்களிக்கப் போகும் அனைத்து மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் கண்ணை மூடிக்கொண்டு எந்த கட்டுப்பாடுகளையும் செய்யாமல் உள்ளது என்று பேசினார்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்