Local body election | உள்ளாட்சியில் உள்குத்து: ராமநாதபுரத்தில் தோழர்களை கழற்றிவிட்ட உடன் பிறப்புகள்
காதர்பாஷா முத்துராமலிங்கம் தலைமையிலான ஒரு அணியும், போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையிலான ஒரு அணியுமாக பகிரங்கமாகவே செயல்பட்டு வருகிறார்கள்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நகராட்சியில் தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 வார்டுகள் கேட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு 9-வது வார்டு மட்டும் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் இரண்டு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களும் கையெழுத்திட்டனர். அவ்வாறு ஒதுக்கப்பட்ட 9- வது வார்டு வேட்பாளராக ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கடந்த 4-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். பின்னர், சிறிது நேரத்தில் அதே வார்டுக்கு தி.மு.க நகரச் செயலாளரர் நாசர்கான், மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார். யாருக்கும் எந்த தகவலும் சொல்லாமல் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய ஒரேயொரு வார்டில், திடீரென்று தி.மு.க நகரச் செயலாளரே வேட்புமனுத் தாக்கல் செய்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை மட்டுமல்ல, ராமேஸ்வரத்திலுள்ள அனைத்துக் கட்சியினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
கூட்டணி தர்மத்தின் ஒப்பந்தத்தை மீறியதால், ஒரே வார்டில் கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிடுகிறது. இது திமுக கூட்டணி கட்சிகளிடம் மட்டுமின்றி மற்ற அரசியல் கட்சிகளின் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ராமேஸ்வரம் நகராட்சியில் தி.மு.க போட்டியிடும் பெரும்பாலான வார்டுகளில் மூத்த கட்சிக்காரர்களுக்கு சீட் ஒதுக்காமல், மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் சிபாரிசு செய்தவர்களுக்கு மட்டும் சீட் வழங்கியதாகவும், மாவட்ட அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆதரவாளர்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்றும் புகார் எழுந்து வருகிறது.
அதே போல, பரமக்குடி நகராட்சியில் நடைபெற உள்ள நகர்மன்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் திமுக 28 வார்டுகளிலும் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதில் 16 -வது வார்டில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அக்கட்சி சார்பில் வினோதினி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக இருந்த சில மணி நேரத்திற்கு முன்பு அதே வார்டில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்த துர்கா என்பவருக்கு திமுக அங்கீகார கடிதம் அளித்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளது.
இந்த சம்பவம் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அதன்மூலம் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் கடைசி நாளில் திமுகவினர் செய்த இந்தசெயலால் கூட்டணி கட்சியிடையே அதிர்ச்சியும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித் தனியே போட்டியிடுவதால் வாக்காளர் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட திமுகவை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாஷா முத்துராமலிங்கம் தலைமையிலான ஒரு அணியும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையிலான ஒரு அணியுமாக பகிரங்கமாகவே செயல்பட்டு வருகிறார்கள். இதனால் கூட்டணி கட்சியினர் இடையே தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் போன்ற நடைமுறை ஒத்துழைப்புளை கடைபிடிப்பதில் நீயா நானா என போட்டி போட்டுக்கொண்டு அவர்களுக்குள்ளே இருக்கும் ஈகோ காரணமாக கூட்டணி கட்சிகளை முதலில் முதுகில் குத்துவதும், கழுத்தறுக்கும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடக்கிறது. இவர்கள் போடும் போட்டியில் பாதிக்கப்படுவது என்னவோ கூட்டணிக்கட்சிகள்தான். கட்சித் தலைமைக்கு இது தொடர்பான விஷயங்கள் காதுகளுக்கு எட்டியும் கண்டும் காணாமல் இருப்பது வேதனையான விஷயம் என தோழர்கள் கண் கலங்குகிறார்கள்.