Local Body Election 2022 | மெதுவடை, சுக்கு காபி, பத்திரிக்கை.. அதிரடி காட்டி வாக்கு சேகரிக்கும் நெல்லை வேட்பாளர்கள்..
வடை சுடுவது, பத்திரிக்கை அடிப்பது, உணவு பறிமாறுவது, சுக்குகாப்பி போட்டு கொடுப்பது என நூதன முறையை கையாண்டு வாக்கு சேகரிக்கும் நெல்லை மாநகர வேட்பாளர்கள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியில் 22-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ். பாலுசாமி வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.. அதன்படி அங்கு உள்ள ஒரு உணவகத்தில் சென்று ஓட்டு கேட்கும்போது உணவு அருந்த அமர்ந்து இருந்தவர்களுக்கு உணவு பரிமாறி அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கடையில் வடை சுட்டுக் கொண்டிருந்தவரிடம் தான் வடைசுட்டு தருவதாக கூறி வடை சுட்டு, டீ போட்டுக் கொடுத்து நூதன முறையில் பிரச்சாரம் செய்தது பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு எண் 45 ல் கதீஜா இக்லாம் பாசிலா என்ற திமுக வேட்பாளர் போட்டியிடுகின்றார். இவர் மேலப்பாளையம் மண்டலத்தில் 45 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களிடையே வாக்கு சேகரித்து வந்தார், அப்போது அங்கு உள்ள தெருவோரக் கடையில் வடை தயாராகிக் கொண்டிருந்தனர். உடனடியாக களமிறங்கிய திமுக வேட்பாளர் வடைகளை தானே சென்று சுட ஆரம்பித்தார். சுட்ட வடைகளை மக்களுக்கு அளித்து திமுகவிற்கு வாக்களிக்கக்கோரி நூதன பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
பாளை மண்டல அலுவலகத்திற்குட்பட்ட 6வது வார்டில் சுயேச்சையாக கே.ஏ.ஏ.கந்தசாமி என்பவர் போட்டியிடுகிறார், இவர் வேட்புமனு தாக்கலின்போதும் மாட்டு வண்டியில் வந்து நூதன முறையில் மனு தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதே போல மக்களிடம் வாக்கு சேகரிப்பதையும் நூதன முறையில் செய்து வருகிறார். 6வது வார்டில் வைரம் சின்னத்தில் போட்டியிடும் இவர்தான் இதுவரை மக்களுக்காக செய்த பணிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று மக்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பதோடு வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் பொன்னாடை அணிவித்து தனது வாக்குகளை நூதன முறையில் சேகரித்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது,
நெல்லை நகராட்சி மாமன்ற உறுப்பினர் திமுக வேட்பாளர் மாரியப்பன் 30வது வார்டு பகுதியில் போட்டியிடுகிறார், இவர் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்தத் தெருவில் உள்ள சுக்கு காபி கடைக்கு வரும் பொதுமக்களுக்கும் மற்றும் வேட்பாளர்களுக்கும் சுக்கு காபி போட்டு கொடுத்து நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . மேலும் மேளதாளங்கள் அடித்தபடி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார், இதில் ஒரு தொண்டர் நடனம் ஆடியபடியே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்தப் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்து தீர்வு காண்பேன் என்று பொதுமக்களிடம் கூறினார்.
நெல்லை மாநகராட்சியின் 24 வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான டி. எஸ். முருகன் என்பவர் இதே வார்டில் கடந்த நான்கு முறை வெற்றிபெற்று மாமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 5 வது முறையும் தனக்கே வெற்றியை தனக்கு தர வேண்டும் என கோரி சைக்கிளில் வீடு சென்று மக்களிடையே தனது அறிவிப்பு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதே போல திருமண நிகழ்ச்சிக்கு பத்திரிக்கை அடிப்பது போல மங்களகரமாக பத்திரிக்கை அடித்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர். 37 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சங்கர் சண்முக சுந்தர் என்ற பட்டதாரி இளைஞர் தனது சின்னமான வாக்கிங் ஸ்டிக் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறி பத்திரிக்கை அடித்து நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகிறார், மேலும் கடந்த 10 ஆண்டுகளாக சமூக செயற்பாட்டாளராக இருப்பதை நீங்கள் அறிந்ததே, எனவே 37 வது வார்டில் எனது பணி தொடர வாக்களித்து வாய்ப்பு தர வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.
இவ்வாறு ஒவ்வொருவரும் தனக்கான வாக்குகளை மக்களிடம் பெற நூதன முறையை கையாண்டு வாக்கு சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், குறிப்பாக பரப்புரை செய்வதற்கான நாட்கள் மிக குறைவாக இருப்பதால் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் சின்னங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியை நூதன பிரச்சாரங்கள் மூலம் எடுத்துரைத்து வருவது குறிப்பிடத்தக்கது