Karnataka Election Result: கர்நாடகாவில் கலையும் பாஜக கனவு..பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை.. தொண்டர்கள் உற்சாகம்
Karnataka Election Result 2023: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 10 ஆம் தேதி நடந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்ததால் 73.19 சதவீத வாக்குகள் பதிவானது. இதனால் அங்கு ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதால் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை எந்த கட்சிகள் அமைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. காலை 8 மணி வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது (9 மணி) வரையிலான நிலவரப்படி காங்கிரஸ் கட்சியானது பாஜகவை 8% அதிக வாக்குகளைப் பெற்றது.
மேலும் பாஜக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் இருந்த 8 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்ததால் அக்கட்சி தொண்டர்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்ட பல தலைவர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
இதனிடையே ஒவ்வொரு சுற்றை எண்ணி முடித்த பின் அதிகாரிகள் அளிக்கும் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 68 இடங்களிலும்,மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும், பிறர் 5 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது. இதுவரை காங்கிரஸ் 43.6% வாக்குகளையும், பாஜக 36.6% வாக்குகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 11.9% வாக்குகளையும் பெற்றுள்ளது.
பாஜக பின்னடைவால் அந்த கட்சியின் மாநில தலைமை அலுவலகம் தொண்டர்கள் வருகை குறைவாகவே காணப்படுகிறது. அதேசமயம் வெற்றி பெறும் காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூருவுக்கு விரைந்து வருமாறு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. அங்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Karnataka Election Results 2023 LIVE: கொண்டாட்டத்தில் காங்கிரஸ்! அப்செட்டில் பாஜக! கர்நாடகா வாக்கு எண்ணிக்கை தகவல்கள் உடனுக்குடன்..!